பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

எழு பெரு வள்ளல்கள்

எண்ணம் உண்டாயிற்று. காரணம் இல்லாமல் அவன் மேல் போர் தொடுக்கலாமா? பாண்டியன் செய்த காரியத்தையே அவர்கள் செய்தார்கள். தனித்தனியே பாரியின் மகளிரை மணக்க வேண்டுமென்று தூது விட்டார்கள்; மறுப்பே விடையாக வந்தது.

பாரியை வெல்லவேண்டும் என்ற கருத்துத் தமிழ் நாட்டில் முடியுடை வேந்தர்களாக விளங்கிய மூவருக்கும் உண்டாகிவிட்டது. அவர்கள் ஒன்றுகூடி அவனோடு போர் செய்யத் தமக்குள் ஆலோசனை செய்தார்கள்; போர் முரசு கொட்டினார்கள்.

பாரி தன் படைவீரர்களை யெல்லாம் ஒன்று கூட்டினான். நாட்டிலுள்ள ஆடவர்களில் வலிமையும் காளைப் பருவமும் உடையவர்கள் படையில் சேர்ந்தார்கள். நாடு முழுவதையும் காப்பதைவிடப் பறம்பு மலையைக் காப்பாற்றுவது எளிது என்று தோன்றியது. ஆகவே படை முழுவதையும் அம்மலையின் மீது, வைத்துக்கொண்டு அரண்களையெல்லாம் செப்பம் செய்தான் பாரி.

மூவேந்தர் படைகளும் பறம்புநாட்டின் எல்லேயை அடைந்தன. பேருக்கு ஒரு சிறு படை ஆங்கே நின்று அப்படைகளை எதிர்த்தது. சில நாழிகைகளில் அது பகைப் படைகளுக்கு வழி விட்டுவிட்டது. அதைக கண்டு மும்மன்னர்களுக்கும் பெருமகிழ்ச்சி உண்டாகியது. எதிர்ப்பு இல்லாமலே பறம்பையும் பாரியையும் கைவசப்படுத்திவிடலாம் என்று எண்ணினார்கள். அதற்கு ஏற்றபடி அவர்கள் நாட்டுக்குள்ளே நுழைந்து செல்கையில் யாரும் எதிர்க்கவில்லை. பறம்பு மலையை அடைந்தார்கள். அந்த மலையின்மேல் பாரி படையுடன் தங்கியிருப்பதை அறிந்தார்கள்.