பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

எழு பெரு வள்ளல்கள்

நுகர்ந்து களிப்பான் பேகன். பிறகு பலவகைப் பரிசில்களை அளிப்பான். பொன்னாலாகிய தாமரைப் பூவை அவர்கள் அணியும்படியாகத் தருவான். அந்தக் காலத்தில் பாணர்களுக்குப் பொற்றாமரை அளிப்பது வழக்கம். பாணர்களுடைய மனைவிமார்கள் ஆடுவார்கள்; பாடுவார்கள். அவர்களுடைய ஆடல் பாடல்களையும் கண்டு மகிழ்வான். அவர்களுக்குப் பலவகை அணிகலன்களைப் பரிசளிப்பான். சில சமயங்களில் பாணர்களுக்கும் புலவர்களுக்கும் தேரையும் அளிப்பதுண்டு.

சங்க காலப் புலவர்களில் தலைமையும் புகழும் பெற்றவர் கபிலர். அவர் பல முறை பேகனிடம் வந்து சில நாள் தங்கிச் சென்றார். கபிலர் பரணர் என்று சேர்த்துச் சேர்த்துச் சொல்வார்கள். கபிலரைப் போலவே பரணரும் பெருமதிப்பை உடையவர். அவரும் பேகனிடம் வந்தார். வேறு புலவர்களும் அவனை நாடி வந்தார்கள்; அளவளாவினார்கள்; பாடினார்கள்.

தமிழ்ப் புலவர்களிடம் மிகவும் மதிப்பு வைத்துப் பழகினான் பேகன். பொதினி மலையின்மேல் இருந்த திருக்கோயிலில் முருகன் எழுந்தருளியிருந்தான். மலையைச் சுற்றி வாழ்ந்த குறவர்கள் இடைவிடாமல் அப்பெருமானைத் தொழுது வழிபட்டார்கள். மழை பெய்யாவிட்டால் அவனுக்குப் பூசை போடுவார்கள். மழை மிகுதியாகப் பெய்தாலும் மழை நிற்கவேண்டு மென்று கும்பிட்டு வழிபடுவார்கள். குறிஞ்சி நிலக் கடவுளாகிய முருகனிடத்தில் அந்நில மக்களாகிய அவர்களுக்குச் சிறிதும் தளராத நம்பிக்கை இருந்தது. பேகன் அவர்களுடைய நல்வாழ்வைக் கண்டு களித்தான். அவர்களுக்கு உதவிகளைச் செய்தான்.