உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேகன்

25

யோசிப்பதில்லை. மதம் பொருந்திய யானையையும் வீர கண்டையை அணிந்த காலையும் உடைய பேகன் அந்த மாரியைப் போன்றவன். வரம்பு இல்லாமல், ஆராய்ச்சி இல்லாமல் கொடையைப் பொழிகிற மழை அவன். இப்படிக் கொடை மடம் உடையவனாக இருக்கிறான் என்பதனால், வீரச் செயல்களிலும் அறியாமை உடையவன் என்று எண்ணக்கூடாது. படையைக் கொண்டு போரிடும் திறத்தில், நன்றாகச் சூழ்ந்து, இடத்துக்கும் காலத்துக்கும் தன் வலிமைக்கும் மாற்றான் வலிமைக்கும் ஏற்றபடி செயலை வகுப்பதில் வல்லவன். கொடை மடம் படுவானே அல்லாமல் படை மடம் படமாட்டான்” என்று அந்தப் பெரும் புலவர் பாடினர். அவன் கொடையைப் புகழ்ந்ததோடு நில்லாமல் வீரத்தையும் எடுத்துக் காட்டினர்.

அது முதல் தமிழ் மக்கள் பேகனை மயிலுக்குப் போர்வை வழங்கிய வள்ளல் என்று பாராட்டத் தொடங்கினார்கள்.

*

இவ்வாறு புகழ்பெற்ற பேகனுக்குக் கண்ணகி என்ற மனைவி இருந்தாள். ஆடல் கலையில் வல்ல ஒரு விறலியின் ஆட்டத்திலும் பாடலிலும் அவன் ஈடுபட்டான். அதனால் மற்றக் காரியங்களைக்கூட மறந்திருந்தான். அந்த விறலியும் சில காலம் ஆவிநன்குடியில் தங்கியிருந்தாள். இது சம்பந்தமாகக் கண்ணகிக்குத் தன் கணவன்மேல் ஐயம் உண்டாயிற்று. அதனால் சிறிது கோபமும் எழுந்தது. அதை ஊடல் என்பார்கள். எப்படியோ அந்தச் சிறிய ஊடல் பெரிதாக வளர்ந்துவிட்டது. பேகன் தன் மனைவியை ஒரு