பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிகமான்

31

டார்கள். சேரர்களுக்கும் அதியர் குலத்தினருக்கும் அடிக்கடி பூசல் நிகழ்வது உண்டு.

அதிகமான் சிறந்த வள்ளல்; பெரு வீரன். புலவர்களிடையே இருந்து இனிதே பொழுது போக்குபவன். எதைச் செய்தாலும் அதில் ஈடுபட்டு ஒருமை மனத்தோடு செயல் செய்யும் இயல்புடையவன். போர் பற்றிய ஆலோசனையில் ஆழ்ந்திருந்தால் வேறு எதையும் கவனிக்காமல் தன் அமைச்சர்களுடனும் படைத் தலைவர்களுடனும் அதுபற்றிய பேச்சிலே ஈடுபட்டிருப்பான்.

அவனை நாடிப் பல புலவர்கள் வந்தார்கள்; பாடினார்கள்; பரிசு பெற்றார்கள். தமிழ்ப் புலமையிலே சிறந்த மூதாட்டியாகிய ஒளவையார் அவனிடம் வந்தார். அப்போது அதிகமான் ஏதோ இன்றியமையாத ஆலோசனையில் ஈடுபட்டிருந்தான். அத்தகைய சமயங்களில் யாரும் அவனை அணுக அஞ்சுவார்கள். அரசியல் அதிகாரி ஒருவர் ஒளவையாரை வரவேற்றுத் தாகத்திற்கு நீர் கொடுத்து அமரச் சொன்னார். ஒளவையார் அமர்ந்தார். "மன்னர் மிகவும் முக்கியமான ஆலோசனையில் இருக்கிறார். இதோ வந்துவிடுவார். சற்றுப் பொறுக்க வேண்டும்” என்று அதிகாரி பணிவாகச் சொன்னார். சிறிது நேரம் ஆயிற்று. அதிகமான் வரவில்லை.

ஒளவையார் பொறுமையை இழந்தார். 'எவ்வளவு நேரம் பிச்சைக்காரியைப் போலக் காத்திருப்பது?' என்று கோபம் மூண்டது. உடனே ஒரு பாட்டைப் பாடினர். அங்கே இருந்த வாயில் காவலனைப் பார்த்து அந்தப் பாடலைச் சொல்லத் தொடங்கினார். "வாற்காரா, வாசற்காரா, கொடையாளிகளின் காதுகளில் தம்முடைய சொற்களை விதைத்து, தம் காரியங்களை