பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிகமான்

37

காகத் தவஞ் செய்து பெற்ற கனி அது" என்று வெடுக்கென்று சொல்லிவிட்டார்.

"இதில் ஏதோ சிறப்பிருக்கிறது போலிருக்கிறதே!" என்று ஒளவையார் அங்கே இருந்தவர்கள் முகத்தைப் பார்த்தார். ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டதென்ற செய்தியை அவர்கள் முகங்கள் தெரிவித்தன. ஒளவையார், "ஏதோ ஒரு புதுமை இக்கனியில் இருக்கிறது. நீ உண்ண வேண்டியதை நான் உண்டுவிட்டேன் என்று தெரிகிறது. உண்மையை ஒளிக்காமல் சொல்லவேண்டும்" என்று அதிகமானைக் கேட்டார்.

"நான் சொல்கிறேன்" என்று பெரியவர் முன் வந்தார்; கதையை யெல்லாம் சொல்லி முடித்தார்.

அப்போதுதான் ஒளவையார், அவசரப்பட்டுத் தாம் செய்த செயலின் விளைவை உணர்ந்து இரங்கினார். "அப்படியா? நான் என்ன காரியம் செய்து விட்டேன்! பல காலம் வாழவேண்டிய உனக்குக் கிடைக்க வேண்டியதை நான் இடையிலே தட்டிப் பறிப்பதற்காகவா வந்தேன்?" என்று துயரம் விம்மும் குரலோடு கேட்டார்.

அதிகமான் புன்முறுவல் பூத்தான்; "தாங்கள் அப்படிச் சொல்லக்கூடாது. இறைவன் திருவுள்ளத்தின் படியே யாவும் நடக்கும். நான் எத்தனை காலம் வாழ்ந்தால் என்ன? சில போர்களைச் செய்வேன்; பலரை மடியச் செய்வேன். உலகம் அரசர்களால் வாழ்வதில்லை; அறிவு சிறந்த சான்றோர்களால் வாழ்கிறது. தங்களைப் போன்ற பெரும் புலவர்கள் வாழ்ந்தால் உலகம் நன்மையை உணரும்; நேர்மை வழியை உணரும்; கவிதை விருந்தை நுகரும். இந்த அரிய