பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

எழு பெரு வள்ளல்கள்

கனி எங்கே போய்ச் சேரவேண்டுமோ, அங்கேதான் போய்ச் சேர்ந்திருக்கிறது" என்றான்.

ஒளவையாருக்கு அதிகமானிடம் உண்டான மதிப்பு ஆயிரம் மடங்கு உயர்ந்துவிட்டது. ‘இவன் தெய்வப் பிறவி' என்று மனம் குளிர்ந்து வாழ்த்தத் தொடங்கினார்.

"அதியர் குலத்தில் வந்த கோமானே, நீ வாழ்க! போரில் பகைவரை அழித்து வெல்லும் வீரத் திருவையுடைய நெடுமான் அஞ்சியே, நீ வாழ்க! வாழ்க! பால் போன்ற வெண்பிறையைத் திருமுடியிலே சூடும் நீல கண்டப் பெருமானைப்போல நீ என்றும் நிலைபெற்று வாழ்வாயாக! நீ எத்தனை அரிய ஈகையைச் செய்தாய்! மலையிலே விளைந்த அரிய நெல்லிக்கனியை, நாம் உண்டால் நல்லதென்று எண்ணாமல் எனக்குக் கொடுத்தாயே! இதனால் உண்டாகும் அரிய பயன் இன்னதென்று எனக்குச் சொல்லாமல் அடக்கி, சாவு நீங்கும்படி எனக்குத் தந்துவிட்டாயே! உன் பெருமையை என்னவென்று சொல்வேன்! வாழ்க, வாழ்க, வாழ்க!" என்று பாடி வாழ்த்தினார்.

"அந்தக் கனியைவிட இந்தப் பாடல் இனிமையாக இருக்கிறது. அதை உண்டால் இந்த நாற்ற உடம்பு ஒருகால் நெடிது வாழலாம், ஆனால் இந்தப் பாடலைப் பெற்றமையால் என் புகழுடம்பு சாவாமல் வாழும்" என்று மகிழ்ச்சி பொங்கப் பேசினான், அதிகமான் நெடுமான் அஞ்சி.

அதுமுதல் ஒளவையார் உள்ளத்தில் ஏறிக் கொண்டான் அதிகமான். அவர்களிடையே இருந்த நட்பு வலிமை பெற்றது."நான் உங்கள் தம்பி போன்றவன். எனக்குத் தமக்கை யாரும் இல்லை.