பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

எழு பெரு வள்ளல்கள்

அதிகமானுக்கும் ஓரிக்கும் பழக்கம் இருந்தது. ஒரு காரணமும் இல்லாமல் ஓரியின்மேல் படையெடுத்து அவனைக் கொன்ற காரியினிடம் அதிகமானுக்குக் கோபம் மூண்டது. சேரமானுக்குக் கையாளாக இருந்தே இப்படிக் காரி செய்திருக்கிறான் என்பதை உணர்ந்தபோது அதிகமானுக்குச் சினம் முறுகியது. சேரமானுக்கும் அவனுக்கும் வழிவழியே பகைமை இருந்து வருகிறதல்லவா?

அதிகமான் காரியைத் தொலைக்க வேண்டுமென்று கருதி அவன் வாழ்ந்த திருக்கோவலூரின்மேற் படையெடுத்தான். போர் நிகழ்ந்தது. காரி பெரிய வீரன்; அவனிடம் வீரம் மிக்க பல வீரர்கள் இருந்தார்கள். என்றாலும் அதிகமானுடைய படைவலிக்கு முன் காரியின் படை நிற்க முடியவில்லை; தோல்வியையே கண்டது. தான் எதிர்சென்று நின்று போர்செய்தால் அதிகமான் தன்னைக் கொன்றுவிடுவான் என்று அஞ்சிய காரி போர்க்களத்திலிருந்து ஓடிவிட்டான். நேரே வஞ்சி மாநகர் சென்று தனக்கு நேர்ந்த கதியைச் சொன்னான்.

பெருஞ்சேரலிரும்பொறை காரிக்கு ஆறுதல் கூறினான். "இதுவும் நல்லதாகப் போயிற்று. அதிகமானைப் பூண்டோடு அழிக்க நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அவனை அழித்து உனக்கு மீட்டும் திருக்கோவலூரை உரிமையாக்குகிறேன்" என்றான் சேரமான். அன்று முதலே போருக்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான். காரியும் தன்னுடன் ஓடிவந்த வீரர்களைத் தொகுத்து ஒரு சிறிய படையாக அமைத்துக்கொண்டான். தக்க படைப் பலம் இருக்கிறது என்ற நம்பிக்கை தோன்றியவுடன் போர் முரசு கொட்டினான் சேரன்.