பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிகமான்

41

அதிகமான் அதற்கு அஞ்சவில்லை. சிங்கக் குட்டியைப் போலத் துள்ளிக் குதித்தான். அவனுடைய கோட்டை மிகவும் வலிமையுள்ளது. பகைவர்களால் அழிப்பதற்கரியது. கோட்டைக் குள்ளிருந்து புறத்தே செல்வதற்கு இரகசியமான சுரங்க வழி ஒன்று இருந்தது. பகைவர்கள் நெருங்கும்போது அதன் வழியே யாரும் அறியாமல் வெளியிலே சென்றுவிடலாம்.

அதிகமான் வெளியே வந்து போர் செய்வதை விரும்பவில்லை. கோட்டையைத் தக்கபடி பாதுகாத்து வாயில்களை இறுக மூடி உள்ளே இருந்தாலே போதும் என்று எண்ணினான். கோட்டைக்குள்ளே புக இயலாமல் சலித்துப்போய்ப் பகைவர்கள் போய்விடுவார்கள் என்று அவன் எதிர்பார்த்தான்.

சேரன் படை அதிகமான் கோட்டையை முற்றுகையிட்டது. அதிகமான் வெளியே வரவில்லை; கோட்டையை மூடிவிட்டு உள்ளே இருந்தான். சில நாட்கள் சென்றன. உள்ளே இருப்பவர்களுக்கு உணவு குறைந்துவிட்டால் தானே கோட்டைக் கதவுகளைத் திறந்து வெளியே வந்துவிடுவான் என்று சேரமான் எதிர்பார்த்தான்.

அதிகமானே கோட்டைக்குள் இருந்த சுருங்கை வழியாகச் சிலரை அனுப்பி உணவுப் பண்டங்களைக் கொண்டுவரச் செய்தான். அதனால் எத்தனை காலமானலும் உணவுக் குறை இன்றிக் கோட்டைக்குள் அதிகமானும் அவனைச் சேர்ந்தவர்களும் இருக்கமுடியும். இந்த இரகசியம் சேரமானுக்குத் தெரியாது. 'இவ்வளவு காலத்துக்கு வேண்டிய உணவுப் பொருள்களை எப்படி அவன் இந்தக் கோட்டைக்குள் சேமித்து வைத்திருக்கிருன்!' என்றே வியப்படைந்தான்.