பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
42
எழு பெரு வள்ளல்கள்

அதிகமானுடைய ஊழ்வினை பொல்லாததாக இருந்தது. அவன் அரண்மனை அந்தப்புரத்தில் துணி வெளுத்துவந்த ஒரு வண்ணாத்திப் பெண்ணுக்கு அரண்மனையைச் சேர்ந்த யாரோ தீங்கு இழைக்க முற்பட்டார்கள். அதை அவள் அதிகமானிடம் முறையிட்டுக் கொண்டாள். அவன் அவள் முறையீட்டைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அதனால் அவளுக்கு அதிகமானிடம் வெறுப்பு உண்டாயிற்று. அவளுக்கு அரண்மனை இரகசியம் எல்லாம் தெரியும்.

அந்தப் பெண் இப்போது கோட்டைக்கு வெளியே ஊருக்குள் இருந்தாள். அதிகமானிடம் இருந்த வெறுப்பு இப்போது வேலை செய்யத் தொடங்கியது. அவள் சேரமான் படைத் தலைவன் ஒருவனிடம் சுரங்க வழியைப்பற்றிச் சொன்னாள்.

அதனைத் தெரிந்துகொண்ட அவன் முதல் வேலையாக அந்த வழியை அடைத்துவிட்டான். அதிகமான் குகையுள் அகப்பட்ட சிங்கம்போல ஆயினான். வேறு வழியில்லாமல் கோட்டைக் கதவுகளைத் திறந்து கொண்டு வெளியிலே போர்க்களத்தில் குதிக்க வேண்டிய நிலை அவனுக்கு ஏற்பட்டது.

போர் கடுமையாக மூண்டது. வைரமேறிய தோளும் உரமேறிய உடம்பும் உறுதியேறிய உள்ளமும் படைத்தவர்கள் அதிகமானுடைய படைவீரர்கள். அவர்களை எளிதில் அடக்க முடியும் என்றிருந்தான் சேரமான். அது நடவாது என்பதை இப்போது உணர்ந்து கொண்டான்.

தன் படைத் தலைவர்களுக்கு ஊக்கமூட்டினான் பெருஞ்சேரலிரும்பொறை. யானையும் யானையும் மோதின. குதிரையும் குதிரையும் பொருதன.