பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

சங்க நூல்களால் தெரியவரும் வரலாற்றுச் செய்திகள் பல. மன்னர்கள், புலவர்கள், வள்ளல்கள், பெண்மணிகள் பலரைப் பற்றிய செய்திகளை அவற்றால் அறிந்து கொள்ளலாம். வள்ளல்கள் எழுவர் என்ற வழக்கு மிகப் பழங்கால முதல் இந்நாட்டில் இருந்து வருகிறது. சிறு பாணாற்றுப் படையில் அவர்கள் பெயர்களை நத்தத்தனார் சொல்கிறார். புறநானூற்றுப் பாடல் ஒன்றில் பெருஞ் சித்திரனார் என்னும் புலவரும் அவர்களைச் சொல்கிருர். பின்னால் வந்த நிகண்டுகளின் ஆசிரியர்கள் அவர்களை வரிசையாகத் தொகுத்துச் சொல்லியிருக்கிருர்கள்.

இந்த ஏழு வள்ளல்களின் வரலாறுகளைத் தொடர்ச்சியாகச் சொல்லும் நூல் எதும் இல்லையாயினும், சங்கநூல்களில் கிடைக்கும் குறிப்புக்களைக் கொண்டு ஒருவாறு அவற்றை உணர்ந்து கொள்ளலாம். சில வள்ளல்களின் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்ச்சிகள் புலனாகின்றன; வேறு சிலர் வாழ்க்கையின் விரிவு அந்த அளவுக்குத் தெரியவில்லை.

பழைய நூல்களில் உள்ள குறிப்புக்களைக் கொண்டு ஒருவாறு நிகழ்ச்சிகளைத் தொடர்புபடுத்தி, ஏழு வள்ளல்களின் வரலாறுகளையும் இந்தச் சிறுநூலில் எழுதியிருக்கிறேன். தமிழ்நாட்டுச் சிறுவர்களும் சிறுமியரும் இவற்றைப் படித்துப் பயன் பெறக்கூடும் என்பது என் எண்ணம்.

காந்த மலை :
சென்னை - 28

கி. வா. ஜகந்நாதன்
7–11–59