பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

எழு பெரு வள்ளல்கள்

உன்னுடைய நாடு கடற்கரையில் இருப்பதன்று; உள் நாட்டில் இருப்பது. அதனால் அதைக் கடல் கொள்ளாது; பகைவர்களும் கொள்ள அஞ்சுவார்கள். அத்தகைய நாட்டை நீ வேள்வி செய்து நாட்டுக்கு நலம் புரியும் அந்தணருக்குக் கொடுத்துவிட்டு நிற்கிறாய். முடியுடை மன்னர் மூவருள் யாராவது ஒருவன் வந்து உன்னத் துணையாக அழைத்துச் சென்று அளவற்ற உணவுப் பண்டங்களை வழங்குகிறான். அவற்றைப் பெற்றுக்கொண்டு இங்கே வந்த மறுநாளே, உன் புகழையும் உன் குடிப்புகழையும் சொல்லிக்கொண்டு வரும் புலவருக்கும் பாணருக்கும் அவற்றைக் கொடுத்து விடுகிறாய். எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு வெறுங்கையோடு நிற்கிறாய். உன்னுடையது என்று சொல்வதற்கு என்ன இருக்கிறது? ஒன்றை வேண்டுமானல் சொல்லலாம். கற்புடைய உன் மனைவியின் தோள் ஒன்றுதான் உனக்கு உரிமையாக இருக்கிறது. இந்த நிலையில் நீ எவ்வளவு உள்ளச் செருக்கோடு இருக்கிறாய்!" என்ற கருத்தோடு ஓர் அரிய பாடலைப் பாடினார்.

காரியினிடம் பல புலவர்கள் வந்தார்கள். நன்றாகப் படித்த புலவர்களும் வந்தார்கள். அரை குறைப் படிப்பாளிகளும் வந்தார்கள். எல்லோருக்கும் கையிலே கிடைத்ததை வாரி வீசினான் அந்த வள்ளல். இதைக் கபிலர் கவனித்தார். அவனுடைய கொடையை அவர் பாராட்டினாலும், தரம் அறியாமல் அவன் வழங்குவதை அவர் விரும்பவில்லை. புலவர்களுக்குத் தரமறிந்து பாராட்டுபவர்களிடந்தான் அன்பு அதிகமாக இருக்கும். தரம் அறிதலை வரிசையறிதல் என்று சொல்வார்கள். இந்த உண்மையை