காரி
47
மலையமானுக்கு அறிவுறுத்த வேண்டுமென்று கபிலர் கருதினார். ஒரு நாள் அதற்காக ஒரு பாட்டைப் பாடினார்.
"பெருந் தலைவனே, ஓரிடத்தில் இருக்கும் ஒரு வள்ளலே நோக்கி நாலு திசையிலிருந்தும் கலைஞர்கள் வருவார்கள். அவர்களின் தரத்தை அறிவதுதான் அரிய காரியம்; கொடுப்பது எளிது. கொடுப்பதற்குப் பொருள் இருந்தால் போதும்; வரிசையறிவதற்கோ தனித்திறமை வேண்டும். இதை நன்றாக நீ தெரிந்து கொள்ளவேண்டும். இனி, புலவர்களையெல்லாம் ஒரே நிறையாகப் பார்ப்பதை விட்டுவிடு" என்று அறிவுறுத்தினர்.
அவனுடைய வீரத்தையும் அவர் பாராட்டினார். "உலகில் துணையாக வந்தவனை அவனால் வெற்றி பெற்றவன் புகழ்வது தான் இயல்பு. உன் திறத்தில் அப்படி அன்று. வெற்றி பெற்றவனைப் போய்க் கேட்டால், 'நானா வென்றேன்? எல்லாம் காரி தந்த வெற்றி' என்று சொல்வான். தோற்றவனிடம் போனாலோ, "அந்தக் கட்சியில் மலையமான் சேர்ந்திருந்தான். அவன் மாத்திரம் அங்கே இராமல் இருந்தால் நான் எளிதில் வெற்றி அடைந்திருப்பேன்’ என்று கூறுவான். இப்படி, வென்றவனும் தோற்றவனும் உன் புகழையே சொல்லும்படி இணையில்லாத வீரனாக நிற்கிறாய் நீ" என்று புகழ்ந்தார்.
இவ்வாறு கொடையிலும் வீரத்திலும் சிறந்து வாழ்ந்திருந்த காரி சேரமானாகிய பெருஞ்சேரலிரும் பொறைக்காக ஓரியைக் கொல்லும்படி நேர்ந்தது. அதனால் அதிகமான் திருக்கோவலூரின் மீது படையெடுத்தான். அவனை எதிர்த்து நிற்க முடியவில்லை காரிக்கு.