48
எழு பெரு வள்ளல்கள்
ஒரியோடு பொருதமையால் வீரர்கள் இளைப்புற்றிருந்தனர். அந்தச் சமயம் பார்த்து அதிகமான் போர் செய்யப் புகுந்தமையால் இயல்பான மிடுக்குடன் போர் செய்ய இயலவில்லை.
அப்போரில் தோல்வியுற்ற காரி சேரமான் பெருஞ்சேரலிரும் பொறையை அடைந்தான். அவன் அதிகமானோடு போர் தொடங்கினான். அப் போரில் காரி என்னும் தன் குதிரையின்மேல் ஏறி ஒரு பெரும் படைக்குத் தலைமை தாங்கினான் திருமுடிக்காரி. அவனுடைய வீரம் நன்றாகத் தகடூர்ப் போரில் வெளியாயிற்று. சேரமான் அந்தப் போரில் வென்றான். காரிக்கு அவனுடைய திருக்கோவலூரைத் தந்ததோடு வேறு பல பரிசில்களையும் வழங்கினான்.
மூன்று முடிமன்னர்களும் ஒரு சமயம் தம்முட் சண்டையின்றிச் சேர்ந்திருக்கும் நிலை வந்தது. அப்போது மூவரும் மலையமானுடைய பெருமையைப் பேச நேர்ந்தது. மூவரும் தனித்தனியே அவனைப் பாராட்டினர்கள். "இத்தகைய பெருவீரனுக்கு நாம் மூவரும் சேர்ந்து ஒரு சிறப்பைச் செய்யவேண்டும்" என்று முடிவு செய்தார்கள். முடியையணியும் உரிமை சேர சோழ பாண்டியர்களுக்கே இருந்தது. சில பெரும் புலவர்கள் முடியணியும் சிறப்புடையவர்களாக இருந்தார்கள். அவ்வாறே மலையமானுக்கும் முடி சூட்டி அதையணியும் உரிமையை வழங்கலாம் என்று தீர்மானித்தார்கள். ஒரு பெரு விழா நடத்தி அவனுக்கு முடி அணிந்தார்கள். அதற்குமுன் மலையமான் காரி என்ற பெயரே இருந்தது. இந்தச் சிறப்பு நிகழ்ச்சிக்குப் பின் அவனுக்கு மலையமான் திருமுடிக் காரி என்ற பெயர் நிலவியது.