உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்

55

எழுந்தன. அவனுடைய பண்புகளை அறிந்து நயமாக விளக்கிப் பாடினார். ஒரு பாட்டில், "வடக்கே இமயம் இருக்கிறது. அதனோடு ஒத்த பெருமை உடையதாகத் தெற்கே ஆய்குடி இருக்கிறது. அது இல்லையானால் இந்த உலகம் பிறழ்ந்து விடும்" என்று பாடினார்.

ஒருநாள் அவரைத் தன் தேரில் அழைத்துச் சென்றான் ஆய். காட்டு வழியே அந்தத் தேர் சென்றது. அங்கே பழக்கப்பட்ட பல யானைகள் இருந்தன. அவற்றைப் பார்த்த புலவர் ஒரு பாட்டைப் பாடினர். "இந்தக் காட்டில் இத்தனை களிறுகள் இருக்கின்றனவே! இந்தக் காடு, மேகக் கூட்டங்கள் தங்கும் மலையையும் சுரபுன்னை மலரால் தொடுத்த கண்ணியையும் உடைய ஆய் அண்டிரனுடைய குன்றத்தைப் பாடிற்றே?" என்று பாடினார். அவனுடைய யானைக் கொடையையே அப்பாடலில் சிறப்பித்தார்.

ஒருநாள் சில அன்பர்களுடன் தனியே பேசிக் கொண்டிருந்தார் மோசியார். அப்போது ஆயினுடைய ஈகைச் சிறப்பைப் பற்றிய பேச்சு வந்தது. "பொருளைச் சேமித்து வைப்பதனால் பயன் என்ன? அது எப்படியும் அழிந்து போவது. அதை அறிந்து தன்னிடம் வருபவர்களுக்கு வாரி வழங்குகிறான் ஆய்” என்றார் ஒருவர். "இந்த உலக வாழ்வு ஒன்றையே எண்ணித் தமக்கு வேண்டிய இன்பங்களைத் துய்த்து வாழும் செல்வர்கள் பலர் இருக்கிறார்கள். பிறருக்கு ஒன்றையும் அவர்கள் ஈவதில்லை. ஆய் இங்கே நன்கு வாழ்வதோடு மறுமையிலும் நல்ல இன்பம் கிடைக்க வேண்டுமென்று அறம் செய்கிறான்; வருங்கால வாழ்வை நினைக்கும் அறிவாளன் அவன்" என்று வேறு ஒருவர் கூறினர்.