பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

3



2. கண்ணனின் மனத்தூய்மை

பாரதப் போர் முடிந்தது. வீமன் கதையினால் (கதாயுதம்) அடியுண்டு துரியோதனன் குற்றுயிராகக் கிடந்தான். அகிலமெல்லாம் ஆணை செலுத்திய அரசன். அனாதையாகக் கிடக்கக் கண்ட அசுவத்தாமன் மனம் வருந்தினான்.

"உன்னை அழித்தவர்களை இன்று இரவுக்குள் வேரோடு அழித்து, அவர்கள் தலையை உன் காலடியில் காணிக்கையாக வைக்கின்றேன்" என்று சபதம் செய்தான் அசுவத்தாமன்.

இதனை அறிந்த கண்ணன், பாசறையில் இருந்த பாண்டவர்களை வேறிடத்துக்கு அழைத்துச் சென்று விட்டான்.

பாண்டவர்களைக் கொல்லப் பாசறையுட் புகுந்த அசுவத்தாமன், பாஞ்சாலியின் புதல்வர்களைப் பாண்டவர் என்று கருதி, அவர்கள் தலையை அறுத்து விட்டான்.

போரில் வெற்றி பெற்றும் தங்களுக்குப் பின் நாட்டை ஆள்வதற்கு இருந்த வாரிசுகளும் இறந்துவிட்டனரே என்று தருமர் கவலையுற்றார்.

அபிமன்யுவின் மனைவி உத்தரை கருவுற்றிருந்தாள். அவள் நல்லமுறையில் குழந்தை பெற்றால், வாரிசு இல்லை என்ற கவலை தீரும் என நம்பினார் தருமர்.


"இடிஇடித்திடு சிகரிகள் ஆம்என
எறிமருச்சுதன் முதல்இக லோர்தலை
துடிதுடித்திட அவர்அவர் சேனைகள்
துணிப டப்பொருது எழுபுவி நீபெற
விடிவ தற்குமுன் வருகுவென் யான்"


என்ற சபதப்படி உத்தரையின் கருவையும் அழிப்பதற்குப் பிரமசிரசு என்ற அம்பை ஏவினான் அசுவத்தாமன்.