பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

த. கோவேந்தன்


வணங்கமாட்டான். உடனே திரும்பிவிடுவான். நான் இராமனாகக் காட்சி தரப்போகிறேன். உங்கள் இருவரில் ஒருவர் சீதையாக உடனே மாற வேண்டும்” என்று கட்டளையிட்டான்.

காட்டில் வாழ்ந்த சீதையாக மாறுவது அவ்வளவு கடினமா? என்று அலட்சியமாகக் கருதிய உருக்குமணி பலவித ஒப்பனைகளைச் செய்து கொள்ளத் தொடங்கினாள். சீதையின் எளிமைத் தோற்றத்துக்குப் பதிலாக, செல்வத் தோற்றமே அவளுக்கு அமைந்தது.

“இந்தக் கோலத்தில் உன்னைச் சீதையாக அனுமன் ஒப்ப மாட்டான்” என்று அவளைப் போகச் சொல்லி விட்டான் கண்ணன்.

பாமாவை அழைத்து, “நீ சீதையாக உடனே மாறி வா” என்றான். பாமா உடனே இருந்த ஒப்பனைகளையும் ஆடை அணிகளையும் அகற்றிவிட்டு, எளியதோற்றத்துடன் கண்ணன் எதிரில் நின்றாள்.

அந்நேரம் கருடன் அனுமனை அழைத்து வந்தான். ராமனையும் சீதையையும் கண்ணாரக் கண்டு களி நடனமாடினான் அனுமன். கண்ணன் கழலிணை வணங்கிக் களிக் கூத்தாடி இராம நாம ஜபம் செய்து கொண்டிருந்தான்.

தானே பேரழகி என்ற இறுமாப்பு உருக்குமணிக்கு நீங்கியிருக்கவேண்டும்.

ஆனால் பாமாவின்மேல் மேலும் பொறாமை அதிகரித்தது.

உருவத்தால் பாமா என்னை வென்றுவிட்டாள். கண்ணனிடம் என்னைவிடச் சிறந்த காதல் அவளுக்கு ஏது? என்று மீண்டும் அவள் மனம் கறுவியது.

இதை உணர்ந்த கண்ணன் உருக்குமணி, பாமா இருவரையும் அழைத்து. “உங்களில் என் மேல் மிக்க காதல் உடையவர் யார் என்று அறிவதற்காக ஒரு தேர்வு வைக்கப் போகின்றேன். அதில் வெற்றி பெறுபவரே சிறந்த அன்புடையார் ஆவர்” என்றான்.