பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

39



உடன்பட்டுருந்த நீங்கள். இப்போது அரசநீதி கூறத் தொடங்குவதை எண்ணிப் பார்த்தேன். சிரிப்பு வந்துவிட்டது” என்றாள் பாஞ்சாலி.

“குழந்தாய்! பாஞ்சாலி! நீ நினைத்ததும் சிரித்ததும் ஞாயமானவைதாம் அதற்குரிய காரணம் சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன்”.

“நான் உண்ட உணவு துட்டனாகிய துரியோதனனுடையது அந்த உணவால் உண்டான இரத்தம் என் உடலில் ஓடியது. அந்த இரத்தம் அறநெறியைக் கழுவி, அநீதிச் சேற்றை என்னுள் தேக்கி விட்டது”.

“அதனால்தான், என் வாயிலிருந்து அறநெறி வெளிவரவில்லை. இப்போது, அர்ச்சுனன் அம்புகள் என் உடலைத் துளைத்து, அந்த அநீதிக் குருதி முழுவதையும் வெளியேற்றிவிட்டது”.

“இப்போது என் உடலில் ஓடுவது. இறை பக்தியாகிய குருதி அதனால்தான் அறநெறி கூற என் உணர்வு என்னைத் தூண்டுகின்றது எத்தகைய தூயவராயினும் தீயவர் உறவும் உணவும் உடையவரானால், தீமை கண்டும் சீறி யெழவிடாமல், உணர்வு மழுங்கிவிடும் என்பதற்கு என் செயல் தக்க எடுத்துக்காட்டு. அன்றைய செயலுக்காக இன்று நான் நாணுகின்றேன் என்னைக் கண்டு நீ சிரித்தமைக்காக நான் வெறுப்படையவில்லை மாறாக உவப்பு அடைகின்றேன்”

என்று கூறிவிட்டுத் தருமனுக்கு அரசநீதி கூறத் தொடங்கினார் வீடுமர்