பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

த. கோவேந்தன்


குத்திச சமைப்பாள். நால்வரும் உண்பர். பல நாள் தானிய மணி போதுமான அளவு கிடைக்காவிடின் அரைப்பட்டினி கால்பட்டினியாயிருப்பர்.

ஒரு நாள் சிறிதளவே தானியம் கிடைத்தது. அதைச் சமைத்து நாலு பங்காக்கி, நான்கு தட்டுக்களில் பரிமாறிக் கொண்டிருந்தாள் குடும்பத் தலைவி. அந்நேரம் ஒரு விருந்தினர் வந்து சேர்ந்தார். அவருக்குத் தாள முடியாத பசி, “எனக்கு ஏதாவது உணவு தர இயலுமா?” என்று கேட்டார்.

குடும்பத்தலைவர் தன்பாகத்து உணவை அவர் முன் வைத்தார். அதனால் அந்த விருந்தினர் பசி அடங்கவில்லை. அந்தணர் மனைவி, தன் பங்கை அவருக்குத் தரமுன் வந்தாள்.

“மனைவியைக் காப்பாற்றுவது கணவன் கடமை. நீயோ பசியோடிருக்கின்றாய்! உன் உணவை வாங்கி விருந்தினர்க்கு அளிப்பது அறமாகாது” என்று அந்தணர் அவள் தந்ததை மறுத்தார். “தருமமும் பொருளும் நம் இருவருக்கும் பொதுவானது. விருந்தினர் பசி தணிப்பது இல்லறத்தார் கடமை. ஆதலால், என் உணவையும் விருந்தினர்க்கே அளித்து விடுங்கள்” என்று வற்புறுத்தினாள் மனைவி.

அப்போது, "உங்கள் இருவர் பங்கு உணவும் விருந்தினர்க்குப் போதாது என் பங்கையும் தருகின்றேன்” என்று மகனும் தன் பங்கை விருந்தினரின் முன் வைத்தான்.

மருமகளும் “இந்த உணவு விருந்தினர்க்குப் போதாது. என் உணவையும் தருகின்றேன்” என்று தன் பங்கையும் பரிமாறிவிட்டாள்.

“பிற வேள்விகளில் செய்யும் தானங்களை விட நீங்கள் செய்தது மிகமிகச் சிறந்தது” என்று விருந்தினர் வியந்து பாராட்டினார்.

“அத் தருணத்தில் அழகான விமானம் ஒன்று வானின்று இறங்கியது. அந்த ஏழை அந்தணரையும் அவர் குடும்பத்தாரையும் ஏற்றிக் கொண்டு மோட்ச உலகிற்கு ஏகியது” அந்த விமானம். விருந்தினரும் சென்று விட்டார்.