பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

த. கோவேந்தன்



19. சகாதேவனின் தரும நீதி


ஒரு காட்டில் ஒர் அதிசய விலங்கு வாழ்ந்திருந்தது. அதன் பாதிப்பகுதி விலங்கு வடிவம். மறுபாதி மனித வடிவம். ஆதலால், அது புருட மிருகம் என அழைக்கப்பட்டது.

அளவில்லாத வலிமை படைத்த அது. அக்காட்டையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

வேற்றாளோ வேற்று மிருகமோ அக்காட்டில் புகுந்தால், உடனே அவை, அதற்கு இரையாகி விடும்.

ஒரு நாள் வீமசேனன், எப்படியோ அக்காட்டில் நுழைய நேர்ந்தது. அவனைக் கண்ட புருட மிருகம், இன்று நமக்கு நல்ல விருந்து கிடைத்தது" என்று மகிழ்ந்து வீமனைப் பிடிக்க விரைந்தது. புருட மிருகத்தைக் கண்ட வீமன், தன் நாட்டை நோக்கி ஒடலானான்.

அவனைத் துரத்திய புருடமிருகம், அவனைப் பிடித்து விட்டது. ஆனால், அது பிடித்த போது, அவன் வலக்கால் தன் நாட்டிலும் இடக்கால் அக்காட்டிலும் இருந்தது.

“நீ என்னைப் பிடித்தது தவறு. நான் என் நாட்டைத் தொட்டுவிட்டேன். என்னை விட்டுவிடு” என்றான் வீமன்.

“இல்லை! இல்லை! நீ என் காட்டில் தான் பிடிபட்டாய்! ஆதலால் நான் உன்னை உண்பதில் தவறு இல்லை” என்று வாதிட்டது புருடமிருகம்.

“நம் வழக்கை நாமாகத் தீர்க்க முடியாது. இந்நாட்டு அரசரிடம் சென்று நீதிகேட்போம். அவர் சொற்படி நடப்போம்” என்றான் வீமன். வீமன் யோசனையைப் புருட மிருகமும் ஒப்பியது. இருவரும் தருமன் சபையை அடைந்து, தம் வழக்கை எடுத்துரைத்தனர்.