பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழைத்திருந்தால் இப்படிக் காடு காக்க வேண்டியநிலை வந்திருக்குமா என்ற கேள்வியைச் சகாதேவன் எழுப்புகிறான். விளக்கம் கதையில் உள்ளது.

கண்ணன் மீது அதிக ஈடுபாடுள்ளவனாகக் காட்டிக் கொண்ட அர்ச்சுனனுக்குப் பாடம் புகட்டக் கண்ணன் எண்ணினான். கண்ணன் மேல்கொண்ட பக்தியால் மகனை இரு கூறாக அறுத்த பெற்றோரையும் அறுக்கும்போது மகனின் இடக்கண்ணில் நீர் வந்ததால் ஏற்கமாட்டேன் என்று சொன்ன கண்ணனிடம் வலப்புறம்தானே உனக்குக் காணிக்கையாகிறது: இடப்புறத்துக்கு அந்தப்பாக்கியம் இல்லையே என்று இடதுகண் அழுவதாகப்பெற்றோர் கூறுகின்ற கதைஇந்நூலில் இடம்பெறுகிறது.

துரோணருக்கு அகவத்தாமன் என்ற மகன் மட்டுமல்ல சாந்தா என்ற மகளும் இருந்ததாகவும் துரோணரின் சாதிவெறி அகந்தை அம்மகளால் அழிந்ததென்றும் ஒரு நாடோடிக்கதை கூறுகிறது.

துரியோதனனுடன் பிறந்தவர் நூறுபேர். சகுனியுடன் பிறந்தவரும் நூறுபேர். வணங்கா முடியான துரியோதனனால் நூறு மாமன்மாருக்கும் மரியாதை செலுத்த முடியவில்லை. அதனால் அவர்களைச் சிறையில் அடைத்து ஆளுக்கு ஒருபருக்கைச்சோறு உணவாகக்கொடுத்தான். சகுனி நூறுபேரின் பருக்கைச் சோறும் உண்டு உயிர் பெற்றான். மற்றவர்கள் இறந்தனர். துரியோதனனைப்பழிவாங்கவே கைவரிசையைக் காட்டினான் என்ற கதை இந்நூலில் இடம்பெறுகிறது.

விதுரனின் மனைவி கொடுத்த பழத்தோலைக் கண்ணன் ஏன் உண்டான்? பாஞ்சாலியின் பட்டுச்சேலைகண்ணனின் மானத்தை எப்படிக் காத்தது? கண்ணன் வெண்ணெய் திருடும்போது கையும் களவுமாகப் பிடிப்பதற்காக உறியில் கட்டிவைத்த மணி கண்ணன் வெண்ணெய் திருடும்போது ஒலிக்காமல், வெண்ணையைவாயில் வைக்கும்போது ஏன் ஒலித்தது என்பன போன்ற பல சம்பவங்கள் அடங்கிய ஏட்டில் இல்லாத கதைகள் இந்நூலில் அடங்கியுள்ளன.

இக்கதைகளைப் புலவர் த. கோவேந்தன் தொகுத்துள்ளார். அவருடைய முயற்சி பாராட்டுக்குரியது. இந்நூலை வெளியிட்டு வாசகர்களின் பேராதரவைப் பெரிதும் நாடுகிறோம்.

-பதிப்பகத்தார்.