பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

63



24. பழத்தோலில் சுவை கண்ட பரந்தாமன்

பாண்டவர் தூதளாகப் பரந்தாமன் அத்தினபுரம் சென்றான். பரந்தாமன் வருகை அறிந்த ஆன்றோர் அனைவரும் அவனை எதிர்கொண்டனர்.

கண்ணன் இராசவீதி வழியாக வந்து கொண்டிருந்தான். வீதியின் இருமருங்கிலும் வானம் அளாவிய மாளிகைகள் கண்ணனை வரவேற்பதற்காக அலங்கரிக்கப்பட்டு விளங்கின.

முதல் மாளிகையைக் கண்ட கண்ணன் "இது யாருடையது?" என்றான். "என்னுடையது" என்று பதில் வந்தது. பதில் சொன்னவன் துரியோதனன்.

இப்படியே ஒவ்வொரு மாளிகையையும் கண்னன் கேட்டுக் கொண்டே வந்தான். அவனைத் தொடர்ந்து எதிர் கொண்டவர்கள் என்னுடையது என்னுடையது என்றே சுட்டிக் காட்டினர்.

துரோணர், வீடுமர். கிருபர். துச்சாதனன், கர்ணன் முதலியோர் அனைவரும் அவ்வாறு கூறியவருள் முக்கியமானவர்கள்.

கண்ணன். அவர்கள் வரவேற்பைப் பொருட்படுத்தாமல், சென்றுகொண்டேயிருந்தான். வீதியின் கடைசிப் பகுதிக்கு வந்தாகி விட்டது. அங்கே ஒரு கூரைச் சிறுகுடில். தவக்குடில் போல விளங்கியது. வழக்கம் போல் "இது யாருடையது?" என்றான் கண்ணன்.

"இது தேவரீரது திருமாளிகை" என்று பதில்வந்தது. பதில் வந்த திசையை நோக்கினான் எம்பெருமான். அங்கே மகாத்மா விதுரர். பணிவுடன் கண்ணனை வணங்கியவண்ணம் காட்சியளித்தார். அவரது தோற்றம் அடக்கமே உருவம் கொண்டு எதிரே நிற்பது போன்றிருந்தது.