பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

த. கோவேந்தன்



பக்தவத்சலனான பாண்டவர் தூதன், "அப்படியா? இப்பெருநகரில் எனக்கும் ஒரு மாளிகையுள்ளதே! நான் அதில் தங்குவதே முறை" என்று கூறிக் கொண்டு, அந்தக் குடிலுக்குள் நுழைந்துவிட்டான்.

தனது சிறு குச்சிலில் தற்பரன் எழுந்தருளிவிட்டான் என அறிந்த விதுரன், பூரித்துப் போனான்.

எதிர்பாராமல் வந்த விருந்தினன் கண்ணனை எவ்வாறு உபசரிப்பது? ஏதாகிலும் பால், பழம் வாங்கி வரலாம் என்று விதுரன் வெளியே சென்று விட்டான்.

விதுரன் வீட்டில் அவன் துணைவி மட்டும் தனியாக இருந்தார். கண்ணனை எதிர்பாராமல் சந்தித்த அந்த அம்மையாரும் விம்மிதமுற்றுச் செய்வதறியாது திகைத்து நின்றார்.

கண்ணன் அமர்வதற்கு ஓர் ஆசனங்கூடத் தரவேண்டும் என்று தோன்றவில்லை.

கண்ணன் ஒன்றையும் எதிர்பாராமல், தரையில் அமர்ந்து கொண்டான்.

"அம்மா எனக்குப் பசிக்கின்றது. ஏதாவது கொண்டு வாருங்கள்!" என்றான் கண்ணன்.

வீட்டில் இன்னும் சமையல் ஆகவில்லை. விதுரன் ஏதாவது வாங்கி வந்த பிறகுதான் சமையல் ஆக வேண்டும்.

அதற்குள் பரம்பொருள் பசிக்கின்றது என்கின்றாரே அந்த அம்மையார் செய்வதறியாமல் இயந்திரம் போல் இயங்கத் தொடங்கினாள்.

சமையலறையில், எப்போதோ சமைத்த கீரை மட்டும் இருந்தது. காய்ந்து போயிருந்த அந்தக் கீரையைக் கொண்டுவந்து கண்ணன் முன் வைத்தாள்.

கண்ணன் கைநிறைய வெண்ணெய் எடுத்துண்டு பழகியவன் அல்லவா? அந்தப் பழக்கத்தால் போலும்! கீரையைக் கைநிறைய எடுத்து உண்டான்.