பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

65



“ஆகா இவ்வளவு சுவையான கீரையை இதற்கு முன்பு நான் உண்டதே இல்லை” என்று கூறியவாறே அந்தக் காய்ந்துலர்ந்த கீரை முழுவதும் உண்டுவிட்டான்.

“கீரை தீர்ந்துவிட்டதே! வேறு என்ன தரலாம்!” என்று சிந்தித்த அந்த தெய்வத்தாய்க்கு, வீட்டுக்குள் வாழைப்பழம் இருப்பது நினைவுக்கு வந்தது.

விரைந்து சென்று வாழைப்பழம் கொண்டுவந்தாள். பழத்தை உரித்து உரித்துப் பகவானுக்குத் தர்த்தொடங்கினாள். பக்திப்பரவசத்தில் மூழ்கிய அம்மையார், அவசரத்தினால் உரித்த சுளைகளை அப்பால் எறிந்துவிட்டுப் பழத்தோலை இறைவன் திருக்கரத்தில் கொடுத்தாள். கண்ணன் பழத்தோலை சுவைத்துச் சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தான். பழச்சுளைகள் குப்பையில் விழுந்துகொண்மே இருந்தன.

அப்போது விதுரன் வந்துவிட்டார். கண்ணனுக்குத் தன் மனைவி வெறுந்தோலைத் தருவதும், அவன் உண்பதும் கண்ட விதுரர், வியப்பில் மூழ்கினார். “ஐயோ! பகவானுக்குத் தோலை உண்ணத் தந்து அபசாரப்பட்டுவிட்டோமே!” என்று கழிவிரக்கம் கொண்டார்.

“இறைவனே விருந்தினனாக வந்துள்ள போது, வாழைப் பழத்தோலைத் தரலாமா? இது பகவானுக்குச் செய்யும் அவமானமல்லவா? இங்கே கொண்டுவா நான் தருகின்றேன். நீ சென்று சமையல் செய்!” என்று மனைவியை அனுப்பிவிட்டுத் தாமே வாழைப்பழத்தை உரித்துத் தரலானார். தோலை எறிந்து விட்டுச் சுளையைத் தந்தார் விதுரர்.

பழச்சுளையைச் சற்றே சுவைத்த மாயபிரான், விதுரனை நோக்கி, “நான் இவ்வளவு நேரமும் உண்ட தோலின் சுவை இந்தச் சுளையில் சிறிது கூட இல்லையே!” ஆதலால், தங்கள் மனைவியார் தந்ததுபோல் தோலையே தாருங்கள்!" என்று கேட்டு அருந்தலானான்.