பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

89



நண்பன் என்னும் மமதையால் ஏதேதோ செய்து திரிகின்றான். அவனைக் கண்டித்துத் தண்டிக்காவிட்டால், நம் ஆயர்பாடிக்கே அபாயந்தான். (கண்ணன் வருகை. தந்தையை வணங்குகின்றான்).

நந்தன்: கண்ணா! நீ இன்னும் விளையாட்டுப் பிள்ளை அல்ல. இந்நாட்டு இளவரசன் எதிர்கால அரசன். ஓர் அரசனுக்குள்ள பொறுப்பும் தகுதியும் உனக்கு வேண்டும். தக்காரோடு பழக வேண்டும். சீமாலிகன் போன்ற தீயோர் நட்புக் கூடாது. எங்கோ கிடந்த சீமாலிகனோடு நட்பாடி அவனுக்கு நீ கற்ற வித்தைகள் அனைத்தும் கற்பித்துள்ளாய் அவன் செய்யும் அடாத செயல்கள் அளவுக்கு மீறிவிட்டன. ஆயர்பாடியே இன்று அவனைக் கண்டு அலறுகின்றது. இவை அனைத்தும் அறிந்தும் நீ அவனைக் கண்டிக்காமல் உள்ளாயே! இது தகுமா!

அமைச்சர்: ஆம் இளவரசே! தாங்கள் அவனைத் தடுத்துத் திருத்தாவிட்டால், ஆயர்பாடியே அழிந்து போகும். பலவித வித்தைகளும் அவன் பயின்றுள்ளதால், யாருக்கும் அஞ்சுவதில்லை. அரசகாவலர் அவனைக் கண்டு அஞ்சுகின்றனர். நமது ஆணையினால் அவனை அடக்க இயலவில்லை. அவனை அடக்கும் வலிமை, இளவரசராகிய தங்களுக்கே உண்டு. (நாரதர், “நாராயண நாராயண” என்று பாடிக் கொண்டே வருகின்றார்).

நந்தன்: யாரது? நாரதப் பிரமமா? வருக! வருக! நல்ல நேரத்தில் வந்தீர்கள். அந்த அரியனையில் அமர்க!