உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏலக்காய்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

எனவே, மேற்கண்ட இருவகைச் செடிகளின் நடுத் தரமான குணாதிசயங்கள் இந்த ரகச் செடிகளில் பரவலாகக் காணப்படுவதும் இயல்புதானே? மேலும், மைசூர் வகைச் செடிகளைப் போல, இவையும் கட்டுறுதி வாய்ந்தவை. இலைகள் நல்ல பச்சை வண்ணத்தில், வண்ணம் பெற்றுத் திகழும். பூங்கொத்துக்கள் செம்பாதி அளவிலே மேலே நோக்கியவாறு நிமிர்ந்திருக்கும்; ஏலக்காய் நெற்றுக்கள்—வித்துறைகள் பருமனாகவும் எடுப்பாகவும் தோன்றும். சுற்றுச்சார்புச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு இயங்கும் இயல்பு கொண்டவை என்பது மலபார் ஏலச் செடிகளின் நல்ல குணம்:– மைசூர் ரகம் மாதிரியே வழுக்கை வகையும் 900 மீட்டர் முதல் 1200 மீட்டர் வரையிலான உயரத்திலே ஆரோக்கியமாகவே வளர்கின்றன; வளர்ச்சி அடைகின்றன.

பிற இனங்களில் சில

ஏலக்காய் வேளாண்மையில் பரபரப்பாகவும் பரவலாகவும் முக்கியம் பெற்று விளங்கும் 'மலபார்', 'மைசூர்' மற்றும் 'வழுக்கா' ஆகிய மூன்று பிரதானமான ரகங்களைத் தவிர, இன்னும் பல கலப்பு வகைச் செடிகளும் ஏலத் தோட்டப் பண்ணைகளிலே உற்பத்தி செய்யப்படுவதும் உண்டுதான்! - பல்வேறு குண இயல்புகளைக் கொண்ட கலப்பு வகை ஏலச்செடிகளில், வாலயார் ரகம் குறிப்பிடத் தக்கது; இதன் விதைக் காய்கள் நீண்டும் ஒடுங்கியும் ஒரே அளவில் உருவாகும்.

அடுத்தது, துவாலவல்லி இந்த ரகத்தில் பூச்சரங்கள் பல பாகங்களைக் கொண்டதாக விசித்திரமாக அமைத் திருக்கும். மேலும், ஏலக்காய்கள் இளஞ்சிவப்பில் தோன்றும்; இலை உறைகளும் அடித்தண்டும் பூக்களின் அமைப்பும் அழகுக் கவர்ச்சியோடு விளங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/20&oldid=505918" இலிருந்து மீள்விக்கப்பட்டது