பக்கம்:ஏலக்காய்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

செயல் முறையின் அடிப்படைத் தத்துவம் ஆகும். மண்ணின் வளம் குன்றினால், சாகுபடியின் பலனும் குன்றி விடும்தானே? ஆகவேதான், மண்ணிற்கு ஊட்டம்தர, மண்ணிற்கு உரம் அளித்திட வேண்டியதாகிறது.

ஏலக்காய் விளைகிற மண்ணில் மணிச்சத்து குறைவு தான்; இது பொதுநிலை. ஆனால், பெரும்பாலான பகுதிகளில் காரத்தன்மை மிகுதியாகவே காணப்படுகிறது. ஆனாலும், மண்ணின் அமிலத்தன்மையோ குறைவாகவே தென்படும். பொதுவாக, ஏலம் விளையும் பூமியில் சுயமான சுண்ணாம்புச் சேர்க்கை நடைபெறும்; இது மாதிரியான சாதகமான நிலை ஏற்பட, பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய காடுகளிலுள்ள மரங்களின் நிழல் பெரிதும் கைகொடுக்கும், நிழல் மரங்கள், விளை நிலத்தின் மண்ணின் கீழ்மட்டப் பகுதிகளினின்றும் ஊட்டமான சத்துப் பொருட்களை உறிஞ்சி எடுத்து இலைகளை மண்ணிலே உதிர்ப்பதன் மூலம், அவை மண்ணின் மேற்புறத்தில் வந்து சேரவும் ஏதுவாகிறது.

இயற்கையின் இப்படிப்பட்ட இயற்கையான நடைமுறையின் பலனாகவே தான், அனுசரணையான அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மைகளோடு மண் வளம் கொண்டு பலன் தரவும் வாய்ப்பு—வசதி கிட்டுகிறது. தவிரவும், சாகுபடி மண்ணின் வளப்பம் பெருகவும், பாதுகாக்கப்படவும் வெடியம், கரியகக்காடி மற்றும் சாம்பரச் சத்துக்களைக் கொண்ட உரங்களும் பெரும் அளவிலே ஒத்துழைப்பு நல்குகின்றன என்பதும் உண்மையே தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/25&oldid=505925" இலிருந்து மீள்விக்கப்பட்டது