உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏலக்காய்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

வயதின் வளர்ச்சியை அடைந்து, விளைச்சல் தரவல்ல சாகுபடிக் கட்டமைப்புக்களோடும் நெறிமுறைகளோடும் 'செய்நேர்த்தி' பண்ணப்பட்ட பிரதானமான வயலில் நடவு செய்யப்படுவதற்குத் தயாராகி விடுகின்றன. அவ்வாறு, ஏலத் தோட்ட விவசாய நிலமும் மேற்கண்ட நாற்றுக்கள் நடவு செய்யப்படுவதற்கான விவசாய அந்தஸ்தை அடைந்து விடும்போது, ஏலச் சாகுபடி வருங்காலத்திலே வளமுடன் திகழும் என்பதற்கான நன்னம்பிக்கைக்கு அப்போதே பிள்ளையார் சுழி போடப்பட்டு விடுகிறது என்றும் கொள்ளலாம் அல்லவா?

இனி:

ஏலக்காய் வேளாண்மையின் நடவுப் பணிக்கான நெறி முறைகள் புள்ளிக்கு உதவக்கூடிய பள்ளிக் கணக்காகத் தொடர்கின்றன; தொடர் சேர்க்கின்றன.

நாளது தேதிவரையிலும் பயிர் செய்யப்படாத காடுகள் தழுவிய கன்னி நிலப் பிரதேசங்களிலுங்கூட, ஏலக்காய் விவசாயம் வெற்றிகரமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறதென்பதும் நடைமுறை உண்மையேதான்! அப்படிப்பட்ட பகுதிகளிலே, அங்கங்கே மண்டியிட்டு மண்டிக் கிடக்கின்ற முட்புதர்கள், செடிகள் மற்றும் புல்பூண்டு வகைகளை முதன்முதலில் அப்புறப்படுத்தி, அந்த நிலப்பரப்பைச் சுத்தப்படுத்திச் சமன் செய்து, பிறகு நன்றாக உழுது செய்நேர்த்தி செய்தாக வேண்டும். காட்டு மரங்களின் மேலே பரந்து விரிந்து கிடக்கின்ற கிளைகளையும் கொம்பு களையும் சீவிச் சாய்த்து, செடிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வாழ்வு தரும் மிதமான வெப்பத்தை வழங்கக் கூடிய விதத்தில் நிழலைச் சீர் செய்ய வேண்டியது அடுத்த அலுவல். சரி; அங்கே நிழல் பற்றாக்குறையா? அப்படியென்றால் நிழல் தரும் செடி இனங்களை ஊன்றி வளர்த்தால், பிரச்னை தீர்ந்து விடாதா என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/34&oldid=505936" இலிருந்து மீள்விக்கப்பட்டது