பக்கம்:ஏலக்காய்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

அதனால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. இந்நிலையில், அதற்குச் சீரான நிழல் சரியானமுறையில் அவசியம் ஆகிறது. மேலும், மரங்களின் நிழல்கள் அடர்த்தியாகவும் கனமாகவும் அமைய நேர்ந்தால், செடிகளின் உயிர்ப்பொருள் மாற்றத்தின் செயலாற்றல் தடைப்பட்டு, செடிகள் ஆரோக்கியமான வளர்ச்சியை அடைவது தடைப்பட நேரிடும். ஆகவே, ஊட்டச்சத்துக்களை ஒருநிலைப் படுத்தி உயிர்ப்பொருள் மாற்றத்தின் இயக்கம் நல்லபடியாகப் பயன்படுத்தப்பட்டுப் பயன்தரும் வகையில், கதிரவனின் ஒளியைப் போதுமான அளவில் செடிகளுக்குக் கிடைக்கச் செய்வதும் அவசியம் ஆகிறது. மழையால் செடிகள் தாக்கப்படாதவாறு பாதுகாப்புடன் இருப்பதற்கும் நிழல் நிர்வாகம் உதவ வேண்டும். அதுபோன்றே, கோடை வெயில் நாட்களிலும் நிழல் பராமரிப்பு செடிகளுக்குத் தேவைதான்.

ஏலத்தோட்டங்களில் நிழற் பணிமுறைகளுக்கு உதவுவதாகச் சிவப்புத் தேவதாரு, சந்தனவயம்பு, பலா, குரங் கட்டி, பாலி, முல்லா மற்றும் வருணா போன்ற செடி இனங்கள் கருதப்படும். புதர்சார்ந்த செடி வகைகளில் கோகோ மற்றும் இலவங்கச் செடிகளும் நல்ல நிழலைத்தரும்.

நிலத்தின் அமைப்பு, மண்ணின் இயல்பு, சாகுபடிப் பரப்பின் உயரம், காற்று அடிக்கும் போக்கு, வேளாண் மைத் தட்ப வெப்பநிலை, மழை நிலவரம், வளரும் செடிகளின் சுற்றுப்புறச்சூழல் ஆகிய சார்புநிலைகளுக்கு ஏற்ப நிழலின் தேவைகள் நிர்ணயிக்கப்படலாம்.

சீரான நிழலின் அமைப்பில் உருவாகத்தக்க சீரான சீதோஷ்ணத்தில், செடிகளின் ஆரோக்கியம் பேணப்படும். தரமான பூச்சரங்கள் தோன்றும்; ஏலக்காய்கள் எடுப்பாகவும் பருமனாகவும் அமைந்திடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/39&oldid=505943" இலிருந்து மீள்விக்கப்பட்டது