பக்கம்:ஏலக்காய்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

ஆனால், நிழல் பராமரிப்பு சரிவர அமையாமல், செடிகளிலே கூடுதல் வெளிச்சம் பாய்ந்தால், செடிகளின் வளர்ச்சி குன்றும்; தூரடியில் தேவையற்ற முளைகள் பெருவாரியாகத் தோன்றும். இளங்குருத்துக்கள் உறுதி கெடும்: பூங்கொத்துக்கள் சிறுத்துவிடும்; பின் ஏல நெற்றுக்கள்வித்துறைகள் பலவீனம் அடைந்திடும்! செடித்தொகுதிகள் வாடி வதங்கிவிட்டால், செடிகளின் வளர்ச்சி தடைப்பட வேண்டியதுதானே?


அடுத்த பணி - களை எடுப்பு

சாகுபடி செய்யப்படும் வயல்களில் ஊட்டச் சத்துக்களை ஆதாரமாகவும் ஆகாரமாகவும் கொண்டு வளர்கின்ற ஏலச் செடிகளுக்குப் போட்டியாகவும் மண்வளத்தின் துணையோடும் களைகள் வளருவதும் சகஜமே. களைகள் அப்புறப்படுத்தப்பட்டால் தான், மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்பட்டு, ஏலக்காய்ச் செடிகள் செழித்தும் தழைத்தும் வளர ஏதுவாகும். ஆகவே, ஓர் ஆண்டில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் களை எடுப்பது நல்லது தான.

மே - ஜூன் மாதங்களில் உரம் இடுவதற்கு முன்பாகவே முதல் தடவையாகவும், மழைக்குப் பின்பும் உரம் இடுவதற்கு முன்பும் இரண்டாம் முறையாகவும், வடகிழக்குப் பருவக்காற்று நின்றவுடன் நவம்பர் - டிசம்பரில் மூன்றாவது தவணையாகவும் களை எடுப்புக் காரியங்களை நடத்தி முடிக்க வேண்டும், இந்த நடவடிக்கைகளுக்குக் களை களைக் கொல்லும் மருந்துகளும் ஒத்தாசை செய்யும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நச்சுநோய்ப் பூச்சி புழுக்களைக் கட்டுப்படுத்தப் பூச்சிநாசினி ரசாயன மருந்துகளைப் பிரயோகம் செய்கையில் மேற்கொள்ளப்படும் அதே கவனத்தோடு, வேதியியல் சார்ந்த களை நாசினி மருந்துகளையும் பிரயோகம் செய்தல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/40&oldid=505944" இலிருந்து மீள்விக்கப்பட்டது