பக்கம்:ஏலக்காய்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

இவ்வகை நோயைக் கட்டுப்பாடு செய்ய, நோய்க்கு ஆளான செடிகளைச் சேகரம் செய்து பிடுங்கி எடுத்துத் தொலைவிலே அழித்து விடவேண்டும்.

அத்துடன், 1% அளவில் மானோக்ரொடோஃபஸ் அல்லது 1% அளவில் என்டோஸல்ஃபஸ் பூச்சிக்கொல்லி மருந்தை நோய் பீடிக்கப்பட்ட பகுதிகளில் மாதந்தோறும் தெளித்திடவேண்டும். நச்சுத் தன்மை படைத்த இப் புழுக்களுக்கு மங்களகரமான மஞ்சள் நிறத்தை ஆண்டவன் கொடுத்திருப்பதும் சிருஷ்டிப் புதிரில் சேர்த்திதானோ என்னவோ?

இந்தக் கம்பளிப்புழுக்களில் தண்டுகளை அறுக்கக் கூடிய ஒர் இனமும் உண்டு. இருண்ட பழுப்பு நிறம் பூண்ட இவை செடி இலைகளை உண்டு உயிர் வாழும் இயல்பு கொண்டவை. ராத்திரியில் மட்டுமே நடமாடும் விசித்திரச் சுபாவம் உடையவை. நிலத்து மண்ணில் முட்டைப்புழுக்களாக உருவாகும் இவற்றின் ஆயுட்காலம் வெறும் 17 நாட்கள்தாம்!'

இக்கம்பளிப் புழுக்களை உடனுக்குடன் பிடித்து நசுக்கி விட்டால், தீர்ந்தது கதை. தவிர, ஃபாஸ்லோன் வேதியல் மருந்துக் கலவையை 1% அளவில் நீரில் கலந்து தெளிக்கவும் செய்யலாம்.

வேறு சில சின்னஞ்சிறிய பூச்சி ரகங்கள் — பெயர் வைக்கப்படாத பூச்சிகள் — செடி இலைகளின் அடிப்புறங்களில் ஒளிந்திருந்து இலைகளின் நரம்புகளைக் கிழித்து, அவற்றிலிருந்து கசிந்து சொட்டும் சாற்றை உறிஞ்சிக் குடிக்கும். நாற்றுப் பண்ணைகளில் இவை பரவலாகவே காணப்படும்.

'கெல்தான்' என்ற மருந்தை 1% விகிதாசாரத்தில் கலக்கிப் பயன்படுத்துவது மரபு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/45&oldid=505950" இருந்து மீள்விக்கப்பட்டது