59
ஏலக்காய், கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் மேற்கு மலைத் தொடர்ச்சி விரிந்து பரந்து கிடக்கின்ற குன்றுகள் சூழ்ந்த காடுகளிலும் காடுகள் சார்ந்த நிலப் பரப்புக்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்தியாவில் ஏலக்காய் வேளாண்மை நடைபெறும் மொத்த நிலப்பரப்பு 1984ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ள மதிப்பளவின் அறிக்கையின்படி 93,947 ஹெக்டேர் ஆக அமைகின்றது! ஏலச் சாகுபடியின் மொத்தப் பரப்பில், கேரளத்தின் பங்கு 56,376 ஹெக்டேராகவும், கர்நாடகத்தின் உரிமை 28,223 ஹெக்டேராகவும், தமிழ்நாட்டின் வீதம் 9,348 ஹெக்டேராகவும் அமையும்.
உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஏலக்காய்க்கே முதல் இடம்!
ஏலக்காய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உலகத்தின் நாடுகளுக்கு மத்தியில் இன்று முன்னணியில் நின்று வருகின்ற, இந்தியநாடு, உலகத்தின் மொத்த ஏலக்காய் விளைச்சலில் 60 சதவீதப் பங்குப் பணியைப் பெற்றுப் பெருமை பெற்று வருவதும் சிறப்புக்குரிய தகவல் ஆகிறது. ஆக, இந்திய நாட்டின் சிறு ரக ஏலக்காய்ப் பயிர்ச் சாகுபடி இன்றைக்கு 4000 மெட்ரிக் டன் என்னும் அளவைத் தாண்டி நிற்பதும் குறிக்கத்தக்க சேதிதான்.
ஏலக்காய் உற்பத்தியில் உலகிலேயே சிறந்து விளங்கும் இந்தியநாடு, ஏலக்காய் ஏற்றுமதியிலும் உலகநாடுகளிலே முதன்மையான இடம் பெற்று வருகிறது. உலக நாடுகளின் மொத்த ஏலக்காய் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 75 சதவீதமாக அமைவதும் மகிழ்ச்சிக்கும் வரவேற்புக்கும் உகந்ததே அல்லவா?
ஏலக்காய்ப் பயிர்த்தொழிலில் ஈடுபட்டுள்ள உலக நாடுகளிலே, குவாடிமாலா, தான்ஸேனியா மற்றும் ஸ்ரீலங்கா எனப்படும் இலங்கை முக்கியமானவைதான்!