பக்கம்:ஏலக்காய்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எண்ணிப் பார்க்கிறேன்

தமிழ்ப் படைப்பு இலக்கியத் துறையிலே வெள்ளி விழாக் கொண்டாடிய நிலையில், பத்திரிகைத்துறை எழுத்துப் பணிகளைத் தொடர்ந்த எனக்கு பாரதத்தின் பிரதமர் மாண்புமிகு அன்னை இந்திரா காந்தியின் கீழ் ஓர் அரசு ஊழியனாகப் பணிபுரியக்கூடிய ஒரு நல்வாய்ப்புக் கிட்டியதென்றால், அதை ஆண்டவனின் ஒர் அருட் கொடை என்பதாகவே அரசுப் பணியினின்றும் ஒய்வுபெற்ற இந்நேரத்திலும்கூட நான் கருதுகிறேன்! அந்த நல் வாய்ப்பின் விளைபலனாகவே, ஏலக்காயின் கதையைப் பற்றி—இந்திய ஏலக்காயின் நறுமண இன்சுவை பொதிந்திட்ட வரலாற்றைப்பற்றி—உங்களுக்கு எடுத்துரைக்கும் பொறுப்பும் எனக்கு இப்போது விதிக்கப்பட்டிருக்கிறது போலும்!

நறுமணப் பொருட்களின் ராணி ஏலக்காய். ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுச் சிறப்பைக் கொண்டு, இன்று உலக நாடுகளிடையே வரலாறு படைத்து வருவதும் குறிப்பிடத் தக்கது. மேலும், பாரதத் திருநாட்டுக்கு ஆண்டுதோறும் ரூ. 50 கோடிக்கும் கூடுதலாகவே அந்நியச் செலாவணியையும் ஈட்டித் தருகிறது.

ஏலக்காயின் வளர்ச்சிக்காக இந்திய அரசின் நிர்வாகப் பொறுப்பின் கீழ் இயங்கிவரும் ஏலக்காய் வாரியம்’ அண்மையில், ஏப்ரல் 14ஆம் நாளில் வடக்கே ஹரித்துவாரில் நடந்த சிறப்புமிக்க 'கும்பமேளா' விழாவிலே ஏலக்காய் மணம் பக்தர்களிடையே பரவிக்கிடந்த அதிசயத்தைச் செய்தி ஏடுகளில் படித்திருப்பீர்கள்! இந்தப் புதிய ஏற்பாட்டினைச் செய்த பெருமைக்கு வாரியத்தின் புதிய தலைவர் திரு. கே. எம். சந்திரசேகர் உரியவர் ஆகிறார்.

கேரளத்து மண்ணிலே கொச்சி எர்ணாகுளத்தில் இயங்கிவரும் வாரியத்தில் தமிழ் எழுத்தாளனாகிய நான் பொது விளம்பரத்துறை மற்றும் 'ஏலக்காய்' ஏடு ஆகியவற்றில் என் பணியை ஆரம்பித்துத் தொடர்ந்த அந்த 1974-84 காலக்கட்டத்தில் எனக்குத் தமிழ்த் தலைவராக வாய்த்த பெருந்தகை திருமிகு டி. வி. சுவாமிநாதன் ஐ. ஏ. எஸ். பிறகு, பேராசிரியர் கே. எம். சாண்டி, பின்னர், தமிழகம் சார்ந்த திரு. எஸ். ஜி. சுந்தரம், பிறகு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/8&oldid=505995" இலிருந்து மீள்விக்கப்பட்டது