பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

காட்சி கொடுத்தவளை காற்றுக்கும் மழைக்கும்
விட்டுக் கொடுத்து வீட்டில் இருப்பது
ஆண்மையோ பக்தியோ என்றொருமனம் கேட்கும்.
உணர்ச்சி வெள்ளமாயிற்று ஓடினான்
மனைவி தடுத்தாள் மகனும் மறித்தான்
தடம் தெரியாது தடுமாறிவிழுந்தும் எழுந்தும்
ஆத்தாள் கோயிலிருந்த ஆற்றங்கரை சேர்ந்தான்
படிப்படியாய் வெள்ளம் படிக்கட்டேறிற்று.
மண்டபத்துக்குள்ளும் வெள்ளம் பாய்ந்தது
பதறினான் கம்பன் பதைத்தான் துடித்தான்
சீறி வந்த வெள்ளத்தின் சீற்றத்தை மீறி
செல்லக் குழந்தை போல் சிலையை அள்ளி எடுத்து
மச்சுக்கு ஏறினான் மாடத்துக்குத் தாவினான்
கோபுரத்தின் உச்சிக்கே கொண்டு சென்றான்
பெருகி வந்த வெள்ளம் மேலும் பெருகி
கோபுரத்தைத் தொட்டது. குமுறினான் கம்பன்
இதயம் துடித்தான். எரிமலையாக வெடித்தான்.

“அன்னையே காவிரி, அடங்காப்பேய் ஆனாயோ
உயிர் வளர்த்த நீ, பயிர்வளர்த்த நீ
அனைத்தும் பாழாக்கும் வெறி கொண்டாயோ
பாவத்தைக் கழுவி புண்ணியத்தை அருளும்
புனிதவதி என்னும் பொன்னிமகள் நீதானோ?