பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8
பழனி
1

தேளுக்கு அதிபனாம் தென்பழனித் தெய்வமே
தாளுக்கு ஆயிரம் தலைவணங்க வந்தேன்
கோளுக்கு நின்அடியார் ஆளானது போதும்,
வேளுக்குப் பெயர் விளங்க வாரி வழங்குதியே

இளநீரும் பன்னீரும் குளிர்சாந்தும் கொண்டு
நாளுக்கு ஆயிரம் முழுக்கு ஆடினால்
நளிர் கொள்ளும் என்று ஞான பண்டிதனே
முண்டிதன் ஆகி முழு நீறணிந்தனையோ

செம்பியரும் சேரர் குலத்து நம்பியரும்
அம்புலியின் வழி வந்தோரும் இன்றிலை அதனால்
தும்பிக்கை பெருமாளுக்கு இளையவனே உன்னை
நம்பி வந்தோம் நல்ல தமிழ் கொண்டு

ஆற்றுப்படை சொல்ல நான் நற்கீரன் அல்ல
ஆற்றலைப் பாட நான் அருணகிரியுமல்ல
ஆசி வழங்க நானவ்வையுமல்ல
ஆசையால் அழைக்கின்றேன் ஆறுதலை, காண

முருகனே முதல்வனே முத்தமிழ் அழகனே
செந்தமிழ் மறவனே இந்திரன் மருகா
மயிலேறும் பெருமாளே வள்ளிக் கணவா
சங்கத் தமிழெடுத்து வாழ்த்துகின்றேன்
சங்கரி மகனே சண்முகனே வருக

2


பழனிமலைத் தங்கமே உன்னைக் காண
பைந்தமிழ்ப் பிள்ளை நான் பரிந்து வந்தேன்
தங்க ரதமேறி வரும் சிங்கார வேலனுக்கே
சங்கத் தமிழாலே ரதம் ஒன்று செய்து வந்தேன்.