பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதம்

99


தெளிவுரை : மகிழ்நனே! வயலையின் சிவந்த கொடியின் பிணையலைத் தொடுத்தலாலே, தன் சிவந்த விரல்கள் மேலும் சிவப்புற்றவளும், செவ்வரிகளையும் குளிர்ச்சியையும் உடைய கண்களையும், சிவந்த வாயினையும் உடையவளுமான இவ்விளமையோள், அழுதழுது வாடி வருந்துமாறு நின் தேர்தான் எவ்விடம் நோக்கிச் செல்லக் கருதியதோ?

கருத்து : 'வெளியே புறப்பட்டாயிற்றோ' என்றதாம்.

சொற்பொருள் : பிணையல் தைஇ - மாலை புனைந்து; பிணைத்துப் பிணைத்துக் கட்டும் மாலையினைப் 'பிணையல்' என்றனர். செவ்விரல் சிவந்த - இயல்யாகவே சிவப்பான விரல்கள் செம்பசலைக் கொடியின் சாறுபட்டு மேலும் சிவப்படைய, 'செவ்விரல் சிவப்பூர' எனக் கலித்தொகையும் இதனைக் கூறும் - (கலி. 76.). இனைய - தொடர்ந்து வருந்த; தொடர்ந்த அழுகைப் புலப்பம் இது. குறுமகள் - இளையோள்; என்றது தலைவியை. எவ்வாய் - எவ்விடம். முன்னின்று - கருதியது. 'தேர் எவ்வாய் கருதியது?' என்றது, 'நீ எவ்விடம் போகக் கருதினை?' என்றதாம்.

விளக்கம் : வயலைக் கொடியை மாலையாகப் பிணைத்துக்கட்டி அணியும் மகளிரது பழைய வழக்கத்தை இச் செய்யுள் காட்டும். 'செவ்விரல் சிவந்த' என்றது, மென்மையான அக்கொடியைப் பிணைக்கும் அம்மெல்வினைக்கே நோவுற்றுச் சிவந்த என்பதுமாம்; இது, தலைவியின் மென்மைச் செவ்வியை வியந்ததாம்:;அதற்கே, கண்கலங்கி அழுத மென்மையள் என்பதும் உணர்த்தியதாம். 'சேயரி மழைக்கண்' இயல்பான அவள் கண்களின் எழிலார் தோற்றம்; அதுதான் இதுபோது செவ்விரல் சிவப்ப இணைதலால், நீதான் மீளப் பிரிந்தனையாயின் இனியும் கெட்டழியும் என்பதாம். செவ்வாய் - சிவந்த வாய்; செவ்வையான பேச்சன்றிப் பிற பேசுதலறியாத பண்புமிக்க வாயும் ஆம். உளம் மறைத்து இன்சொல் பேசும் பரத்தைய்ர் செவ்வாயினர் ஆகார் என்பது குறிப்பு. முன்னின்று - கருதியது; நினைவில் முன்னாகத் தோன்றுவது என்பது பொருளாக வந்த சொல். 'முன்னியது' என்பது மனவுறுதியும் செய்கைத் துணிவும் காட்டுவது.

அவன் தேரேறி வெளியே செல்வதைக் காண்பவள், அவன் பழைய ஒழுக்கத்தை நினைந்தாளாக, மீண்டும் அவன் மனம் ஆதிற் செல்லாவாறு தடுப்பாள், இவ்வாறு சொல்லுகின்றனள் என்றும் கொள்க.