பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

101


விளக்கம்: 'நீயுற்ற சூள்' என்றது, அவன் புதியளான பரத்தை ஒருத்தியை விரும்பித், தலைவிக்குச் சொல்லிய உறுதிமொழிகளை மறந்து, மாறாக நடக்க நினைப்பதைக் குறித்ததும் ஆகலாம். இதனால், 'முன்னிறுத்திச் சூளுரைத்த தெய்வம் நின்னை அணங்கும்' எனவும், அதுதான் 'நின் நலமே நினையும் எம்போல்வர்க்குக் கவலைதரும்' எனவும் குறிப்பாக உரைப்பாள், 'யாம் உற்ற நோய்" என்கின்றாளும் ஆம்.

உள்ளுறை : சிறையழி புதுப்புனல் கழனித் தாமரைகளைக் கலக்கி மலர்வித்தலே போல, இல்லறக் கடமையாகிய ஒழுக்கத்தையும். நின் உறுதிமொழிகளையும், பெருகிய காமத்தாலே மீறிச்செல்லும் நின் பொருந்தாச் செலவால், பரத்தையர் பலரும் மகிழ்வார்கள்; யாம் துன்புறுவோம் என்று கூறியதாகவும் கொள்க. துறைத்தெய்வம் அவனை அணங்கல் குறித்துக் கவலையுற்று நோய்ப்படுவதும் கொள்ளப்படும்; அதுவே சான்றாக அமைந்திருந்த வதனால்.

54. அஞ்சுவல் அம்ம!

துறை: வாயில் வேண்டி வந்த தலைமகற்குத், தலைமகள் குறிப்பு அறிந்த தோழி, அவன் கொடுமை கூறி, வாயில் மறுத்தது.

[து. வி.: பரத்தையிற் பிரிந்த தலைவன் தன் வீட்டிற்கு மீண்டும் வருகின்றான். தன் குற்றவுணர்வின் அழுத்தத்தால், தலைமகளின்முன் செல்லற்கே அஞ்சியவனாகத், தோழியைத் தனக்கு உதவ வேண்டுகின்றான். அவள் அவனுக்கு உதவ மறுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

திண்தேர்த் தென்னவன் நன்னாட் டுள்ளதை
வேனி லாயினும் தண்புனல் ஒழுகும்
தேனூர் அன்னவிவள் தெரிவளை நெகிழ,
ஊரின் ஊரனை நீதர வந்த
பைஞ்சாய்க் கோதை மகளிர்க்கு

அஞ்சுவல் அம்ம! அம்முறை வரினே!

தெளிவுரை: கிண்மையான தேர்களை உடையவன் தென்னவனாகிய பாண்டியன். அவன் நல்ல நாட்டின்கண்ணே உள்ளது தேனூர். அது, வேனிற்காலமே யானாலும் குளிர்ந்த நீர் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றுவளமுடையது. அத் தேனூரினைப்