பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



102

ஐங்குறுநூறு தெளிவுரை


போன்ற, ஆய்ந்தமைத்த வளைகள் நெகிழ்ந்தோடுமாறு செழுமையான இவள் தோள்கள் மெலிய, நீதான் பிரிந்தனை, பரத்தையர் வீதியிலே நீ செல்லுங்கால், நின்பால் அப்போது சூழ்ந்து வந்த பஞ்சாய்க் கோதை மகளிர்க்கும், அம் முறை - அதாவது வளைநெகிழும் நிலை- வருவதனை நினைந்து, யானும் அஞ்சுவேனே!

கருத்து: 'நீதான் நிலைத்த காதலன்பினை இல்லாதவன்' என்றதாம்.

சொற்பொருள்: திண்தேர் - திண்மையான தேர்; தேரின் திண்மை உரைத்தது, தேருக்கு உடையானின் ஆட்சித்திறத்தில் திண்மை காட்டற்காம். நன்னாடு - நம் செறிந்த நாடு. வேனில் - வேனிலாகிய வறட்சிக் காலம். தேனூர் - பாண்டி நாட்டுள். வையைப் பாய்ச்சலில், மதுரைக்கு அருகிலே உள்ள ஓர் ஊர்; 'தேர்வண் கோமான் தேனூர்' என்றும் கூறுவர்; தேனாறு எனவும் பாடம். பஞ்சாய்க் கோதை மகளிர் பஞ்சாய்க் கோரைபோலும் தலைமயிர் நீண்டிருக்கும் மகளிர். முறை - பிரிவால் பரத்தையரும் வளைநெகிழ மெலியும் அவல நிலை; முறை என்றது, 'அவரும் நின்னைப் பிரிந்து வாடுகின்ற வாடற்காலம்' என்பதனையாம்.

விளக்கம்: 'வேனிலாயினும் தண்புனல் ஒழுகும் தேனூர் அன்ன இவள்' என்றது, அவ்வாறே பிரிவாற்றாமையாலே தோள் மெலிந்து வாடுதல் பெறினும், நின்பால் தான் கொண்டிருக்கும் அன்பு மாறாதவளான தலைமகள் என்றற்காம். தெரிவளை தோளிற்கு அமையும் அளவு தெரிந்தெடுத்து அணியும் வளை; உடல் மெலியமெலிய மெலிவு புறந்தோன்றாதவாறு மறைக்கும் பொருட்டுப் பின்னும் பின்னும் சிறியவாகத் தேர்ந்து எடுத்து அணியும் வளை; நெகிழ - அதுவும் நெகிழ்தல்; அதனினும் சிறிது தேடிப்பெற இயலாவாறு தோள் மிகமெலிவுற்றதால் என்பதாம். 'பஞ்சாய்க் கோதை மகளிர்' என்றது, நெடுங் கூந்தலுடைய இளம்பரத்தையரை; நீ தரவந்த மகளிர்' என்று, அவரைக் கொணர்ந்த தலைவனின் செயலைத் தான் அறிந்தமை கூறினாள், அவனை இடித்துக்கூறித் திருந்துமாறு முயல்வதற்கு.

'தேனூர்' அனை இவளை, வாடிமெலியும் வகை வெறுத்து, பஞ்சாய்க் கோதை மகளிர்பின்னால் மயங்கிச் செல்லும் போக்கினன் நீ என்றும், அவரும் நின்னால் கைவிடப்பட நேர்ந்து நீ புதியரை நாடிப் போகும் கொடுமனம் உடையை எனவும் கூறுகின்றாளும் ஆம். 'முறைவரின்' என்றது