பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

103


அம்முறை வந்ததாற்போலும் நீ இவண் வந்தது' எனக் கூறி, அவனை ஒதுக்கிப் போக்கியதுமாம்.

55. துரத்தலின் நுதல் பசந்தது!

துறை: வரைவு அணிமைக்கண்ணே, புறத்தொழுக்கம் ஒழுகி, வாயில் வேண்டி வந்து தன் மெலிவுகூறிய தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லியது.

[து. வி.: வரைவு விரைய வாய்க்கும் பொழுதிலே, புறத்தொழுக்கம் ஒழுகியவனாகி, மீண்டும் வாயில் வேண்டி வந்து நிற்கின்றான் தலைவன். அவன் தன் மெலிவுகூறித் தனக்கு உதவ வேண்டும்போது, தோழி, அவனுக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்
தேர்வண் கோமான், தேனூர் அன்ன விவள்
நல்லணி நயந்து நீ துறத்தலின்,

பல்லோர் அறியப் பசந்தன்று, நுதலே!

தெளிவுரை : கரும்பினைப் பிழியும் எந்திரமானது. களிற்றின் பிளிற்றுக்குரலுக்கு எதிராக ஒலித்தபடியிருப்பது, தேரினையும் வண்மையினையுமுடைய மதுரையார் கோமானின் தேனூர். அதனைப் போன்றதான இவள் நல்லழகினை விரும்பி, இவளை வரைந்து கொண்டு, அடுத்து நீதான் துறத்தலையும் மேற்கொள்ளுதலாலே. இவளது நுதலானது. பலரும் நின் கொடுமை அறியுமாறு பசலை நோய் கொண்டதே!

கருத்து: நீதான், இதுபோது நின் மெலிவுகூறி நயத்தல், எம்மால் வெறுக்கவே தக்கது என்றதாம்.

சொற்பொருள்: கரும்பின் எந்திரம் - கரும்பை நசுக்கிச் சாறுபிழியும் எந்திரம்; கரும்பின் எந்திரத்தைப் புறமும் காட்டும் (புறம் 320). நல்லணி - நல்ல அழகு. "தேர்வண் கோமான்' என்றது பாண்டியனை.

விளக்கம்: எதிர் பிளிற்றல் - எதிரெதிர் தொடர்ந்து ஒலி செய்தல்; இதனால் கரும்பாலை மிகுதியும் களிற்று மிகுதியும் கூறினர். 'நல்லணி' என்றது, திருமண நிகழ்வை. மணம் பெற்றுச் சிலகாலமேயானவன், தலைவியைப் பிரிந்து பரத்தையை நாடிப் போதலாற் பல்லோரும் பழிப்பாராயினர்