பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



104

ஐங்குறுநூறு தெளிவுரை


என்க. தலைவியைக் களவுக்காலத்தே பலப்பல கூறித் தெளிவித்துக் கூடியும், பின் விரும்பி வரைந்து மணந்தும் கொண்டவன், விரைவிலேயே அவளை விட்டுப் பிரிதலைத் தாங்காமல், தலைவியின் நெற்றியிற் பசலை படர்ந்தது: அது பல்லோரும் அவன் கொடுமையை அறியக் காட்டுவதுமாயிற்று.

உள்ளுறை: 'களிற்றெதிர் சிலம்பின் எந்திரம் பிளிற்றும்' என்றது, 'நின் மெலிவு பற்றிய நின் பேச்சுக்கு எதிரே இவள்தன் நெற்றிப்பசப்பு மிகுதியாகத் தோன்றி, இவள் மெலிவுபற்றி ஊருக்கெல்லாம் உரைத்துப் பழிக்குமே" என்றதாம்.

மேற்கோள்: தலைவி அவனூர் அனையாள் என வந்தது எனப்பேராசிரியரும் (தொல். உவம.25); தலைவன் அறம் செய்தற்கும், பொருள் செய்தற்கும், இசையும் கூத்துமாகிய இன்பம் நுகர்தற்கும், தலைவியை மறந்து ஒழுகுதற்கும், தோழி அவர் கூறுதற்கும் இதனை மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல் - கற்பு. 9, 21)

'பெருமை காட்டிய இரக்கம்' எனக் கூட்டுக; இதனாற் சொல்லியது, வாளாதே இரங்குதலன்றி, பண்டு இவ்வாறு செய்தனை, இப்போது இவ்வாறு செய்யாநின்றனை எனத்தலைவி உயர்ச்சியும், தலைமகனது நிலையின்மையும் தோன்ற இரங்குதலாயிற்று என்பர், இளம்பூரணர் -(தொல். பொருள். 150).

56. என் பயன் செய்யும்?

துறை : புறத்தொழுக்கம் உளதாகியது அறிந்து தலைமகள் மெலிந்துழி, அஃது இல்லை' என்று தேற்றும் தலைமகற்குத் தோழி சொல்லியது.

[து. வி.: தலைவன் புறத்தொழுக்கம் உடையவன் என்று அறிந்த தலைமகள், அதுகுறித்த கவலையாலே வாடி மெலிந்தனள். அப்போது தலைவன், 'அவள் அறிந்தவாறு தான் தவறியவன் அல்லன்' என்று உறுதிகூறித், தலைமகளைத் தேற்றுவதற்கு முயல்கின்றான். அவனுக்குத் தலைவியின் தோழி சொல்லியதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

பகல்கொள் விளக்கோடு இராநாள் அறியா,
வெல்போர்ச் சோழர் ஆமூர் அன்ன இவள்
நலம்பெறு சுடர்நுதல் தேம்ப,

எவன்பயம் செய்யும், நீ தேற்றிய மொழியே?