பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

107


சொற்பொருள்: பசலில் - பகற்போதில். பல்கதிர்த் தீ - பலவான நாக்குகளோடு சுடரிட்டு எழுந்து எரியும் பெருந்தீ. தேனூர் - பாண்டிநாட்டுத் தேனூர். நலம் - அழகு; புலம்ப - வருத்தமுற்றதாற் கெட. அனைநலம் - அத்துணை நலம்; அனநலம் என்றும் பாடம். பெண்டு - நின் காதற் பரத்தை.

விளக்கம்: 'பகலிலே தோன்றும் பல்கதிர்த் தீயானது அளவுகடந்த வெம்மையுடையதாயிருக்கும்; எதிரிட்டதை எல்லாம் எரித்தழிக்கும்; அதுபோலவே நின் பிரிவாகிய தீயின் வாய்ப்பட்ட இவள் மிகப்பெருநலனும் கெட்டழிந்தது' என்றதாம். பிரிவாற்றாமையின் வெம்மை மிகுதிக்கு இது நல்ல உவமையென்று கொள்க. 'பகலெரி சுடரின் மேனி சாயவும்' என நற்றிணையும் கூறும் - (நற். 128). வயல்களிலும் ஆம்பல் பூத்திருக்கும் வளமான தேனூர் போன்றது தலைவியின் வளமான அழகு என்றது, அதன் குன்றலில்லாச் சிறப்பை வியந்து கூறியதாம்.

ஆம்பலுக்கு உவமையாகப் பகலில் தோன்றும் பல்கதிர்ப் பெருந்தீயினைக் கொண்டால், அழகான மெல்லியலாராகத் தோன்றும் பரத்தையர், அவரைச் சார்ந்தாரைப் பகலெரி தீப்போல் தவறாதே எரித்தழிக்கும் கொடிய இயல்பினர் என்று உள்ளுறைபொருள் புலப்படுத்துக் கூறியவாறாகக் கொள்க.

'அனை நலம்' - மகப்பயந்து உதவும் நலமும் ஆம்; இவ்வுரிமை தலைமகட்கேயன்றிப் பரத்தைக்கு இல்லாமையைச் சுட்டிக் காட்டி, தலைவியின் பெருமையைச் சிறப்பித்துக் கூறியதாகவும் கொள்க.

மேற்கோள்: 'பிழைத்து வந்திருந்த தலைமகனை நெருங்கித் தலையளிக்குமாறு கூறித் தலைமகள் மாட்டாக்கிக் கொடுத்தற் கண்ணும் தலைவிக்குக் கூற்று நிகழும் எனக் கூறி இச்செய்யுளை இளம்பூரணர் கற்பியலுட் காட்டுவர் - (தொல்.கற்பு. 9).

'வணங்கியன் மொழியால் வணங்கற்கண் தோழி கூற்று நிகழ்வதற்கு' நச்சினார்க்கினியரும் இதனைக் காட்டுவர் - (தொல். கற்பு. 9).

58. பிறர்க்கும் அனையையால்!

துறை: உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் புலந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.