பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

வெழுச்சிகள், அனைத்து மக்களும் இன்பமாகவும் செம்மையாகவும் வாழல் வேண்டுமென்னும் கருத்தினரான தமிழ்ச் சான்றோரைப் பெரிதும் கவர்ந்தன. அவர்கள் புலமையும்: அளவிலா இனிமையே தானாக அமைந்த செழுந்தமிழும், அந்தக் காட்சிகளை மேலும் நயமாக்கியும், சுவைபட எழிலாக்கியும், இலக்கிய வடிவங்களாக்கி நமக்காக வைத்துள்ளன. என்றும் வழிகாட்டும் பான்மையோடு, உணரஉணர உள்ளத்தே உவகை பெருக்கும் நுட்பத்தோடு விளங்கும் இச்செய்யுட்கள் அனைத்தும், தமிழினத்தின் அளப்பரும் பெரும்புகழ்ச் செல்வக் களஞ்சியங்களாகும் என்பதில் எவருக்குமே ஐயம் இருக்க வியலாது.

இந்த ஐங்குறு நூற்றினைத் தொகுத்து அமைப்பதற்கான பேரறிவாளரைத் தேர்ந்து, பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து, அவர்க்கு வேண்டும் வகையால் எல்லாம் பொன்னும் பொருளும் ஆளும் பிறவும் உதவிய பெருந்தகை, சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை யாவான்.

இவன் பழந்தமிழ்க் குடியினரான சேரர்களுள்ளே இரும் பொறை மரபிலே தோன்றியவன். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் வாழ்ந்த புகழ்மிகுந்த நாளிலே தானும் வாழ்ந்து, தமிழினத்தின் மாண்பைப் போற்றிக்காத்துப் புகழ் கொண்டவன். அந்தணாளரான தமிழ்ச் சான்றோரும், குறிஞ்சித்திணைச் செய்யுட்களைச் செய்தலிலே ஒப்பற்றோரும், வேள்பாரியின் உயிர்நட்பினராக விளங்கியவருமான பெரும் புகழ்க் கபிலரின் நட்பைப் பெற்றவன். ஆராத தமிழன்பும், தீராத போராண்மையும், தணியாத வள்ளன்மையும், குறையாத தமிழ்ப்புலமையும் தனதாக்கிக் கொண்டவன். குறுங்கோழியூர் கிழாரால் போற்றிப் புகழ்ந்து பாராட்டப் பெற்றவன்.

சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளியோடும், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற