பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

109


'கைவண்' என்பதாலும் கூறினார். அவனுக்கு உரிய ஊர் 'இருப்பை' என்பது; அது பல்வகை வளத்தாலும் உயர்ந்தது. அதுபோல் அழகுடையாள் தலைவி என்பது, அவ்வூரைச் சேர்ந்தார் அதனைவிட்டு நீங்குதலை நினையாராய் ஒன்றியிருப்பதுபோல, அவளைச் சேர்ந்த தலைவனும் விட்டுப்பிரியானாய் ஒன்றியிருப்பதற்குரிய பேரழகினள் என்பதற்காம். 'இவள் அணங்கு உற்றனை போறி' என்றது. இவ்வாறு எவரொருவர் அழகியராக எதிர்ப்படினும், அவரைக் காமுறும் பரத்தமை இயலபுடையாய் என்று குறித்து அவனைப் பழித்ததும் ஆம். 'வாழி நீயே' என்றது, தான் நம்மை நலிவித்தல் மறந்தானாய், தான் நலிவதாகக் புனைந்து கூறிய நிலையை நோக்கி, தம் பெருந்தகு கற்பினால், அவன் பிழைமறந்து, அவன் உறவை ஏற்று வாழ்த்தியதுமாம்.

59. இவட்கு மருந்து ஆகிலேன்!

துறை : தலைமகள் ஆற்றாளாம் வண்ணம் மனைக்கண் வரவு சுருங்கிய தலைமகற்கும், புறத்தொழுக்கம் உளதாகிய வழி, ஆற்றாளாகிய தோழி சொல்லியது; 'தலைமகற்குத் தேற்றத் தேறாது ஆற்றாளாகிய' என்பதும் பாடம்.

[து. வி.: தலைமகன் வீட்டிற்கு வருவது படிப்படியாகக் குறைகின்றது. தலைவி பிரிவாற்றாமையால் பெரிதும் நலிவெய்து கின்றாள். 'அவன் வராமைக்குக் காரணம் அவனுடைய பரத்தைமை ஒழுக்கமே' என்று அறிந்தாள் தோழி. அதனைப் பொறாதாளான அவள், அவனிடம் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.]

கேட்டிசின் வாழியோ, மகிழ்ந! ஆற்றுற
மையல் நெஞ்சிற் கெவ்வந் தீர
நினக்கு மருந்தாகிய யான். இனி,

இவட்கு மருந்தன்மை நோம், என் நெஞ்சே!

தெளிவுரை: மகிழ்நனே! நீ வாழ்க! இதனையும் கேட்பாயாக. இவளைக் கண்டு மையலுற்ற நின் நெஞ்சிடத்து வருத்தமானது தீருமாறு, இவளை நினக்குக் கூட்டுவித்து உதவி. நீயுற்ற நோய்க்கு மருந்தாக முன்னர் யான் விளங்கினேன். இப்பொழுது, நின் கொடுமையால் இவள் படும் துயரநோயைத் தீர்க்கும் மருந்தாகவும் அமைவதற்கு இயலாமல், நெஞ்சம் வருந்தா நின்றேன்!