பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

111


கருத்து: 'நினக்கு ஊறு நேருமோ?' என்றே யாம் அஞ்சுவேம் என்றதாம்.

சொற்பொருள் : கம்புள் - சம்பங் தோழி. பயிர்ப்பெடை துணையை வேட்டுப் புலம்பற்குரல் எழுப்பியிருக்கும் பெட்டை; பயிற்பெடை எனவும் பாடம். துஞ்சு மனை - இருப்பார் உறங்கியிருக்கும் மனை. நெடுநகர் - பெரிய மாளிகை. மருதத்தே குறிஞ்சியாகிய இரவுக்குறி மறுத்தல் வந்தது இச்செய்யுளில்.

விளக்கம்: இரவுக்குறி மறுத்து வரைவு கடாயது இது. இவள் தந்தை கைவேற்கு நீ அஞ்சாயா அஞ்சாயாய் வரினும், யாம் நினக்கது ஊறுசெய்யுமோ என எண்ணித் துன்புறுவோம்; ஆதலின், இனிப் பலரறிய மணந்து கூடிவாழ்தலே செயத்தக்கது என்று தோழி கூறுகின்றனள். தன்னருகே சேவலைக் காணாத பெடை, அதற்கு, யாது துன்பமோ என நினைந்து அதனை அழைத்தழைத்துக் கூவுதல்போல, தலைவியும் நின்னைக் காணாதே நினக்கென்னவோ ஏதோ என்று புலம்பியிருப்பாள் எனத் தலைவியது காதற்செவ்வி உரைத்ததும் ஆகும். அந்த அழைப்பைக் கேட்டுச் சேவல் அதனருகே விரைவதுபோல, நீயும் இவளை மணந்துகோடற்கு விரைவாயாக என்பதாம்.

"துஞ்சுமனை நெடுநகர் அஞ்சாதே வருதி; ஆயின் வரைவொடு வந்து தமரின் இசைவோடு மணந்து கொள்ள, விரைந்திலை; எம் தந்தை கைவேலுக்கும் அஞ்சினாய் இல்லை; என் கருதினையோ?" என்பதாம். இதனால் இரவுக்குறி மறுத்து வரைவு வேட்டனள் என்பதும் ஆயிற்று.

மேற்கோள்: திணை மயக்குறுதலுள்; மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தது என இச்செய்யுளை நச்சினார்க்கினியர் காட்டுவர். (தொல். அகத். 12).