பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

117


வெதும்புகின்றது. அவன், இல்லந் திரும்பியவன், ஆர்வத்தோடு தலைவியை நெருங்க, அவள் அதனைச் சொல்லிப் புலக்கின்றாள். அவன், அச் செய்தி பொய்யென மறுக்க, அவள் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

அலமரல் ஆயமொடு அமர்துணை தழீஇ
நலமிகு புதுப்புனல் ஆடக் கண்டோர்
ஒருவரும் இருவரும் அல்லர்

பலரே தெய்ய; மறையாதீமே.

தெளிவுரை: எப்போதும் சுற்றிச் சூழ்ந்தவராக வந்து கொண்டிருக்கும் ஆயமகளிரோடும் கூடிய, நின்னால் விரும்பப்படும் பரத்தையைத் தழுவிக்கொண்டவனாக, நீதான், நலத்தை மிகுவிக்கும் புதுப்புனலிலே நேற்று ஆடினை; அதனைக் கண்டோர் ஒருவரோ இருவரோ அல்லர்; அவர் மிகப்பலராவர்; ஆதலின், எம்பால் அதனை மறைத்து ஏதும் நீ கூறுதல் வேண்டா!

கருத்து: 'அவர்பாலே இனியும் செல்வாயாக' என்றதாம்.

சொற்பொருள்: அலமரல் ஆயம் - சுற்றிச் சூழ்ந்தவராக வரும் ஆயமகளிர். அமர்துணை - விரும்பிய பரத்தை. 'தெய்ய' - அசைச் சொல். மறையா தீமே - மறையா திருப்பாயாக.

விளக்கம் : தம் தலைவி செல்லுமிடமெங்கணும் பாதுகாவலாகவும், ஏவுபணி செய்யவும் சுற்றிச் சூழ்ந்து வருபவராதலின், 'அலமரல் ஆயமகளிர்" என்றனள். 'ஆயமகளிர் அலமர, நீ பரத்தையுடன் கூடிப் புனலாடினை' என, அவர் அவ்வுறவின் நிலையாமை பற்றிக் கலங்கி வருந்தியதாகவும் கொள்ளலாம். நலமிகு புதுப்புனல் - உடல் மன நலத்தை மிகவாக்கும் புதுப்புனல்; அழகுமிகுந்த புதுப்புனலும் ஆம். 'அமர்துணை' என்றது பரத்தையை; 'நீ அமர்துணை யாமல்லேம், அவளே' என்று கூறியதும் ஆம். கண்டார் பலர் என்றது அதனால் ஊரில் எழுந்த பழிச்சொல்லும் மிகுதியெனக் கூறியதாம். இவ்வாறு, தலைவர்கள் பரத்தையரோடு புதுப்புனலாடலையும், அதுகேட்டு மனைவியர் சினந்து ஊடலையும், 'எழில் நலத்து ஒருத்தியொடு, நெருநல், வைகு புனல் அயர்ந்தனை என்ப' என அகநானூற்றும் இயம்பக் காணலாம் - (அகம். 116).