பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



118

ஐங்குறுநூறு தெளிவுரை


65. புதல்வனை ஈன்ற மேனி!

துறை : ஆற்றாமையே வாயிலாகப் புக்க தலைமகற்குத் தலைமகள் சொல்லியது.

[து. வி.: புதல்வனைப் பெற்ற வாலாமை நாளில், திதலை படரவும் தீம்பால் கமழவும் தலைவி விளங்குகின்றாள். அவ்வேளை அவளைத் தழுவுதற்கு முற்பட்ட தலைவனுக்குத், தலைவி கூறித் தடுப்பதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

கரும்புநடு பாத்தியிற் கலித்த ஆம்பல்
சுரும்புபசி களையும் பெரும்புனல் ஊர!
புதல்வனை ஈன்றவெம் மேனி

முயங்கன்மோ தெய்ய; நின் மார்பு சிதைப்பதுவே.

தெளிவுரை: கரும்பு நடுவதற்கெனச் செப்பஞ்செய்த பாத்தியிலே, தானாகவே தழைத்த நீராம்பலானது, வண்டினத்தின் பசியைப் போக்குகின்ற, பெரும்புனல் வளமுடைய ஊரனே! புதல்வனை ஈன்ற எம் மேனியைத் தழுவாதேகொள்! அதுதான் நின் மார்பின் அழகுப்புனைவுகளைச் சிதைத்துவிடும்!

கருத்து: 'அதனால், நின் பரத்தையும் நின்னை ஒதுக்குவாள்' என்றதாம்.

சொற்பொருள்: பாத்தி - பகுத்துப் பகுத்து பகுதிபகுதியாக அமைத்துள்ள நிலப்பகுப்பு. கலித்த - செழித்துத் தழைத்த. மார்பு சிதைப்பதுவே - மார்பின் எழிலைச் சிதைப்பதாகும்.

உள்ளுறை : 'கரும்பை நடுவதற்கென்று ஒழுங்கு செய்த பாத்தியில், ஆம்பல் கலித்துச் சுரும்புபசி களையும் பெரும்புனல் ஊரன்' என்றது. இல்லறம் செல்வையுற நடத்தற்காக அமைத்த வளமனைக்கண்ணே வந்து சேர்ந்தாளான பரத்தையும், தலைவனுக்கு இன்பம் தருவாளாயினள் என்றதாம். தலைவன் தன்னைத் தழுவ முயலும்போது, அவன் மார்பின் பூச்சுப் புளைவுகளைக் கண்டு, அவன் பரத்தைபாற் செல்வதாக நினைத்து, 'எம்மைத் தழுவின் எம் மார்பின் பால்பட்டு அவ்வழகு சிதையும்; பரத்தையும் அதுகண்டு நின்னை வெறுப்பாள்' என்று தலைவி மறுத்துக் கூறினள் என்பதும் பொருந்தும்.

விளக்கம் : 'புதல்வனை ஈன்ற எம்மேனி' என்றது, அந்த உரிமை இல்லாதவள் பரத்தை என்று தன் சிறப்புரிமை