பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

123


68. அடக்கவும் அடங்காள்!

துறை : பரத்தை, தான் தலைமகளைப் புறங்கூறி வைத்துத், தன்னைத் தலைமகள் புறங்கூறினாளாகப் பிறர்க்குக் கூறினமை கேட்ட தலைவி, தலைமகற்குச் சொல்லியது.

[து. வி.: தலைமகளைப் பழித்துப் பேசின பரத்தை, தலைமகள் தன்னைப் பழித்ததாகப் புறங்கூறித் திரிகின்றாள். அதனைக் கேள்வியுற்ற தலைவி, தலைவனிடம் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

கன்னி விடியல் கணைக்கால் ஆம்பல்
தாமரை போல மலரும் ஊர!
பேணாளோ நின் பெண்டே

யான்தன் அடக்கவும், தான் அடங்கலளே?

தெளிவுரை: திரண்ட தண்டையுடைய ஆம்பலானது, கன்னி விடியற்போதிலே, தாமரையைப்போலவே இதழ்விரித்து மலர்ந்திருக்கும் ஊரனே! யான் நின் போற்றா ஒழுக்கம் தெரிந்தும், என் வேதனையை அடக்கிக் கொண்டிருப்பவும், நின் பரத்தையானவள், தான் அடக்கமிலாது நடக்கின்றனளே! நின் பெண்டானவள் எப்போதுமே அடக்கத்தைப் பேண மாட்டாளோ?

கருத்து: 'அத்தகையாளையே நச்சிச் செல்லும் நின் தகைமைதான் யாதோ?' என்றதாம்

சொற்பொருள்: கன்னி விடியல் - கதிரவன் உதயத்துக்கு முற்பட்ட இளங்காலைப் பொழுது; இதற்கு முந்திய இரவுப்போதைக் 'கன்னி இருட்டு' என்பார்கள். ஆம்பல் - செவ்வாம்பல். பேணாளோ - அடக்கத்தைக் காத்துப் பேண மாட்டாளோ? 'பெண்டு' என்றது காதற் பரத்தையை. யான் தன் அடக்கவும் - யான் என் சினத்தைத் தகுதியால் அடக்கியிருக்கவும்; அவள் பழித்தலைப் பாராட்டாதிருக்கவும், அடங்கலள் - அடங்காதே, என்னையே பழித்துப் புறங்கூறித் திரிவாளாயினள்.

விளக்கம் : தலைவியின் உயர்குடிப் பண்பும், பரத்தையின் குடிப்பண்பும் அவர்தம் அடக்கமுடைமை இன்மை பொருளாக இச் செய்யுளில் காட்டப்பெற்றன. தனக்குரியானைக் கொண்ட பரத்தையைத் தலைவி பழித்தல் இயல்பேனும், அவள், தன்