பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



124

ஐங்குறுநூறு தெளிவுரை


குடித்தகுதியால் அடக்கம் பேணுகின்றனள்; பரத்தையோ தன் இளமைச்செவ்வியும் தலைவியின் புதல்வற்பெற்ற தளர்ச்சி நலிவும் ஒப்பிட்டுத் தலைவியைப் பழித்தனள். இதற்குக் காரணமானவன் தலைவனே என்று தலைவி மனம் நொந்து கூறியதுமாம்.

உள்ளுறை : சிறப்பில்லாத சேதாம்பல் தாமரைபோல் மலரும் ஊரன் என்றது. சிறப்பற்ற பரத்தையும் தான் தலைவனுக்கு உரிமையாட்டிபோலத் தருக்கிப் பேசுவாளாவள் என்பதைச் சுட்டிக் கூறியதாம்.

69. கண்டனம் அல்லமோ!

துறை : தலைமகன், பெதும்பைப் பருவத்தாள் ஒரு பரத்தையைக் களவில் மணந்து ஒழுகுகின்றதனை அறிந்த தலைமகள், தனக்கில்லை என்று அவன் மறைத்துழிச் சொல்லியது.

[து. வி.: தலைவனின் பரத்தைமையுறவை அறிந்தாள் தலைவி. அவள் கேட்கவும், தலைவன் 'அவ்வொழுக்கம் தனக்கில்லை' என்று உறுதிபேசி மறுக்கின்றான். அப்போது தலைவி அவனுக்குச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.]

கண்டனெம் அல்லமோ, மகிழ்ந! நின்பெண்டே? -
பலராடு பெருந்துறை, மலரொடு வந்த
தண்புனல் வண்டல் உய்த்தென

உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே!

தெளிவுரை : மகிழ்நனே! பலரும் கூடியாடுகின்ற ஆற்றுப் பெருந்துறையினிடத்தே, மலரோடும் பெருகிவந்த தண்ணிய புனலானது தான் அமைத்த வண்டலை அடித்துக்கொண்டு போயிற்றென, தன் மையுண்டகண்கள் சிவப்படையுமாறு அழுது நின்றாளே, அவள் நின் பெண்டே அன்றோ! அவளை யாமும் அந்நாட் கண்டேம் அல்லமோ?

கருத்து: 'நின் பெண்டு யாரென்பதை யாம் அறிவோம்' என்றதாம்.

சொற்பொருள்: வண்டல் - மணலாற் கட்டிய சிற்றில், உய்த்தென -கொண்டு போயிற்று என. 'மலரொடு வந்த தண்புனல்' எனவே புதுப்புனல் என்க. பலராடு