பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



126

ஐங்குறுநூறு தெளிவுரை


கருத்து: 'அதுபற்றியே போலும் நீயும் அவரை நாடிச் சுற்றுவாய்’ என்றதாம்.

சொற்பொருள்: பழனம் - ஊர்ப் பொது நிலம்: எப்போதும் நீர்ப்பெருக்கு உடையதாகிப் பலவகை மீன்கள் செழித்திருக்கும் வளம் பெற்றதும் ஆகும். அருந்த - அருந்திய. சேக்கும் - சென்று தங்கியிருக்கும். கழனி - வயல். சென்னி - உச்சி. மாநீர் - மிகுநீர், கருமையான நீரும் ஆம். தூயர் - மகப்பெற்றாரிடம் எழும் பால்நாற்றம் இல்லாதவர். நறியர் - நறுமணப் பொருள்களால் தம்மைப் புனைந்துடையோர். பேஎய் - வெறுக்க வைக்கும் உருவம் உடையதாகச் சொல்லப்படுவது; மெலிந்த மேனியும், குழிந்த கண்களும், ஒப்பனையிழந்து, பால்முடை நாறும் மார்பமும் கொண்டவள் தான் என்பது தோன்றக் கூறியது.

விளக்கம் : 'நின் கண்ணுக்கு யாம் பேய் அனையம் எனினும்’, நின் குடிக்கு விளக்கம் தரும் புதல்வனைப் பெற்றுத் தந்த தகுதியும் உடையோம்' எனத் தன் தாய்மைப்பெருமிதம் தோன்றக் கூறியதாம். ’தூயர் நறியர்' என்றது, உடலால் தூயரேனும் மனத்தால் தூயரல்லர்; புனைவுகளால் நறியரேனும் பண்பால் நறியரல்லர் என்றதாம்.

உள்ளுறை : பழனப் பன்மீனுண்ட புலவுநாற்றத்தையுடைய நாரையானது. கழனி மருதின் சென்னியிடத்தே சென்று தங்குமாறுபோல, பரத்தையரோடு கலந்துறவாடிக் களித்த நீதானும், இப்போது சிறிதே இளைப்பாறுதலில் பொருட்டாக. எம் இல்லத்திற்கும் வந்தனை போலும் என உள்ளுறையாற் கூறினள்.

இழிந்த புலால் உண்ணும் நாரைக்கு, உயர்ந்த மருதின் சென்னி தங்குமிடம் ஆயினாற்போல, பரத்தையருறவே விரும்பிச் செல்லும் நினக்கும், மகப்பயந்து உயர்ச்சிகண்ட எம்மனை தான் தங்கிப்போகும் இடமாயிற்றோ என்பதும் ஆம்.

காதல் மனைவியோடு கலந்தின்புற்றுக் களித்த தலைவன், அவள் மகப்பெற்றுள்ள நிலையிலே, இன்ப நாட்டம் தன்பால் மீதூறலினாலே தளர்ந்த மனத்தினனாகி, இவ்வாறு பரத்தையர் பாற் செல்வதும், பின்னர் திருந்துவதும் இயல்பாகக் கொள்க.