பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

129


வயன்மலர் ஆம்பல் கயிலமை நுடங்குதழைத்
திதலை அல்குல், துயல்வரும் கூந்தல்,
குவளை உண்கண், ஏஎர் மெல்லியல்
மலரார் மலிர்நிறை வந்தெனப்

புனலாடு புணர்துணை யாயினள், எமக்கே.

தெளிவுரை : வயலிடத்தே மலர்ந்த ஆம்பலாலே தொடுக்கப்பெற்றதும், மூட்டுவாய் கொண்டதுமான, அசைகின்ற தழையுடையினையும், திதலை படர்ந்த அல்குலையும், அசைந்தாடும் கூந்தலையும், குவளை மலர்போன்ற மையுண்ட கண்களையும் கொண்ட, அழகிய மெல்லியலாளான இவள். மலர்மிகுந்த புதுவெள்ளம் ஆற்றிலே பெருகி வந்ததாக, அதன் கண்ணே புனலாட்டயர்தற்கு, என்னோடும் இணைந்திருக்கும் துணையாகப் பண்டு விளங்கினவளே காண்!

கருத்து: அவள், 'இப்போதும் மறுக்கமாட்டாள்' என்றதாம்.

சொற்பொருள்: வயன் மலர் ஆம்பல் - வயலிடத்தே செழித்து மலர்ந்திருந்த ஆம்பல்: கயில் - மூட்டுவாய்; தழையுடையை இடுப்பில் இணைத்துக் கட்டுதற்கு உதவும் பகுதி. நுடங்கல் - அசைதல். ஏஎர் - அழகு. மெல்லியல் - மென்மைத்தன்மை கொண்டவள்; என்றது தலைவியை. மலரார் - மலர்கள் மிகுதியான. மலர்நிறை - புதுவெள்ளம். புணர் துணை - உடன் துணை.

விளக்கம் : பலரறி மணம் பெறுமுன்பே அவ்வாறு என் மேலுள்ள காதலன்பாற் புனலாட வந்தவள், அலரினைப் பற்றியும் நினையாதவள், இப்போது என் உரிமை மனையாளான பின் வராதிருப்பாளோ என்றதாம். அவள் அழகுநலம் எல்லாம் கூறினான், இன்றும், தான் அவற்றையே அவளிடம் காண்பதாகக் கூறி, தான் பிறரைச் சற்றும் நினையாதவன் எனத் தெளிவித்தற்காம்.

மேற்கோள்: 'இது தலைவி புலவி நீங்கித் தன்னோடு புனலாட வேண்டிய தலைவன், முன்பு புனலாடியதனை அவள் கேட்பத் தோழிக்கு உரைத்தது' என, இச் செய்யுளை எடுத்துக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். பொ. 191).

ஐங். - 9