பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மருதம்

131


74. விசும்பிழி தோகை!

துறை : மேற்செய்யுளின் துறையே இதுவும்.

விசும்பிழி தோகைச் சீர்போன் றிசினே
பசும்பொன் அவிரிழை பைய நிழற்றக்
கரைசேர் மருதம் ஏறிப்

பண்ணை பாய்வோள் தண்ணறுங் கதுப்பே!

தெளிவுரை: பசும் பொன்னாலான ஒளியணிகள் விட்டு ஒளிசெய்ய, கரையைச் சேர்ந்திருந்த மருதமரத்திலே ஏறி, நீர்விளையாட்டயரும் இடத்தே மேலிருந்தே பாய்பவளின் - அஃதாவது இத்தலைவியின் - குளிர்ந்து நறிய கூந்தலானது, விசும்பிலிருந்து இழியும் தோகைமயிலது சீரைப்போன்று இருந்ததே!

கருத்து : 'அத்துணை அழகியாளை மறப்பேனோ' என்றதாம்.

சொற்பொருள்: விசும்பு - வானம். இழிதல் - மேலிருந்து கீழாக இறங்கல். 'தோகை' என்றது, தோகையுடைய ஆண் மயிலை. சீர் - சிறந்த அழகு. 'பசும்பொன்' - மாற்றுயர்ந்த பொன். அவிரிழை - ஒளிசிதறும் அணிவகைகள். பைய - மெல்ல. நிழற்ற - ஒளிசெய்ய. கரைசேர் மருதம் - கரையிடத்தே வளர்ந்துள்ள மருதமரம். பண்ணை - மகளிர் நீர் விளையாட்டு நிகழ்த்தும் இடம். பாய்தல் - மேலிருந்து குதித்தல். கதுப்பு - கூந்தல்.

விளக்கம்: களவுக்காலத்தே அவளுடன் மகிழ்ந்தாடிய நீர் விளையாடலை நினைப்பித்து, அவள் மணத்தைத் தன்னிடத்தே அன்புகனிந்து நெகிழுமாறு திருப்ப முயல்கின்றான் தலைவன். இளம்பெண்கள் இவ்வாறு மரமேறிக் குதித்து நீர்விளையாட்டயர்தலை, இக்காலத்தும் ஆற்றங்கரைப் பக்கத்து ஊர்களிற் காணலாம். சுனைகளிலும் கிணறு குளங்களிலும்கூட இவ்வாறு குதித்து நீராடுவர். பெண்கள் கூந்தலை மயிலின் தோகைக்கு ஒப்பிடல் மரபு என்பதனை, 'கலிமயிற் கலாவத்தன்ன இவள் ஒலிமென் கூந்தல்" என்னும் குறுந்தொகையிலும் காணலாம் - (குறுந். 225). கூந்தலை வியந்தது அதுவே பாயலாகக் கூடியின்புற்றதும், அதனைத் தடவியும் கோதியும் மகிழ்ந்ததுமாகிய பண்டை நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தித், தன் பெருங்காதலை அவளுக்கு உணர்த்தியதுமாம்.